
இந்தியர்களின் தினசரி உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு கட்டாயம் இடம் பெறுகிறது. சில சமயம் உணவுகளில் பூண்டு தவிர்க்கப்பட்டாலும், வெங்காயத்தை தவிர்க்க முடியாது , அது இல்லாமல் இந்திய சமையல் நிறைவுறாது. ஆயினும் சிலர் உணவில் எப்போதும் வெங்காயம் மற்றும் பூண்டினை தவிர்த்து விடுகின்றனர் , அது போல விரதக் காலங்களில் உணவுகளில் வெங்காயம், பூண்டினை பலரும் தவிர்த்து விடுகின்றனர். ஒருவேளை இந்த காய்கறிகளை உணவில் ஒரு மாதம் தடை செய்தால் , உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் நேரும் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறையான ஆயுர்வேதம், சில காலங்கள் வெங்காயத்தையும் பூண்டையும் உணவில் தவிர்க்க சொல்கிறது. வெங்காயம், பூண்டில் தனித்தனியாக ஏராளமான மருத்துவக் குணங்களும் உள்ளன. சில வைத்திய முறைகளில் வெங்காயமும் பூண்டும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று வலியுறுத்துகின்றன. உணவுப் பொருட்கள் சில சமயங்கள் நன்மையையும் தீமையையும் கூட மாறி மாறி வழங்குகின்றன.
வெங்காயம், பூண்டு இரண்டும் அவற்றின் காரமான வாசனை மற்றும் சுவை காரணமாக தாமசிக உணவுகளாகக் கருதப்படுகின்றன. தாமசிக உணவுகள் கோபம், பொறாமை, பெருமை, புகழுக்கான ஆசை, சுயநலம் மற்றும் உலக இன்பங்களுக்கான அதீத ஆசையை அதிகரிக்கும் குணங்களைத் தூண்டுகின்றன. இயற்கையாகவே இந்த இரண்டு உணவுப் பொருட்களிலும் மனிதர்களுக்கு உடலில் பாலியல் தூண்டுதல் செய்யும் பீனாலிக் பைட்டோ ரசாயனங்களை நிறைந்துள்ளன.
ஆயுர்வேதத்தின்படி, வெங்காயம் மற்றும் பூண்டு பாலியல் ஆற்றலை அதிகரிக்கவும் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக புனிதமான விரத காலங்களிலும் , பக்தி உணர்வு நிறைந்த நாட்களிலும் இந்த உணவுப் பொருட்களின் நுகர்வை தவிர்க்க வேண்டும். தீவிர ஆன்மீகவாதிகள் , விரதம் இருப்பவர்கள் இவற்றை உணவில் தவிர்க்கின்றனர். வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்ப்பது உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி அமைதிப்படுத்துகிறது. இதனால் மனது சலனமின்றி இருக்கும்.
வெங்காயம் மற்றும் பூண்டைத் தவிர்ப்பதால் நிகழும் மாற்றங்கள்:
பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படும், ஏனெனில் அவற்றில் சல்பர் கலவைகள் உள்ளன. வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்ப்பது வாய் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும்.
வெங்காயமும் பூண்டும் தாமச உணவுகள் என்பதால், அவை மனதை அமைதியற்றதாகவும் பதட்டமாகவும் வைத்திருக்கும். இந்த உணவுகளைத் தவிர்ப்பதால் மன அமைதிஅதிகரிக்கும். மனம் நல்ல செயல்களில் கவனத்தை செலுத்தும் , இதனால் மன அழுத்தமும் குறைகிறது.
மனதில் ஆன்மீக எண்ணங்களை நிலை நிறுத்தவும், மனதினை அமைதிப்படுத்தவும் உணவில் இந்த முறையை பின்பற்றுவது அவசியம். இந்த பொருட்களை உணவில் சேர்க்காமல் இருப்பதால் உணவின் சுவை பெருமளவில் குறைந்துவிடும் . இதனால் , ஒருவர் பசிக்கு மட்டும் தேவையான அளவில் சாப்பிடுவார், உணவு ருசியாக இருக்கிறது என்று ஒரேடியாக சாப்பிடமாட்டார். இதனால் உடலில் எடையும் குறையும், உடல் எடை குறைவால் உடலில் கொழுப்புகள் கரைந்து, தேவையான இன்சுலின் சுரக்க ஆரம்பித்து விடும்.
இதனால் நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை கட்டுக்குள் வர ஆரம்பிக்கும். உணவில் காரத் தன்மை குறைவதால் , இரைப்பை புண் , வயிற்றுப் புண் போன்றவை குணமாகும். இதனால் உடலில் முடி வளர்ச்சி மற்றும் தோல் ஆரோக்கியம் மேம்படக் கூடும். இரைப்பை புண் முடியின் வளர்ச்சியையும் சருமத்திற்கு தேவையான ஊட்டசத்தையும் தடுக்க கூடியது. இது போன்ற நன்மைகளுக்காக ஒரு மாதம் வெங்காயம் பூண்டினை தவிர்க்கலாம்.