இந்தியாவில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி வரி திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், பல பொருட்களின் விலை கனிசமாக குறைந்துள்ளது. இருந்தும் சில விற்பனையாளர்களும், டீலர்களும் தொடர்ந்து பழைய விலையிலேயே பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
பொதுவாக நாடு முழுவதும் ’ஒரே நாடு ஒரே வரி’ திட்டத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவைகள் வரி வசூல் செய்யப்படுகிறது. முதலில் 5,12,18,28 என இருந்த ஜிஎஸ்டி விகிதங்கள் தற்போது 5,18,40 என குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழிருந்த பல்வேறு பொருட்களும் 18 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதால் பொருட்களின் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன. அதேபோன்று 12 சதவீத வரி விதிப்பின் கீழ் இருந்த பெரும்பாலான பொருட்கள் 5% வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மக்கள் தங்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பால், பேஸ்ட், வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் காப்பீடு திட்டங்கள் என பலவற்றின் விலையும் இதன் காரணமாக குறைந்து உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் அரசின் இந்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வகையில் பல்வேறு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. 22ஆம் தேதி முதலே இது அமலுக்கும் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில் சமீபத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, யாரேனும் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது ஏதேனும் ஒரு கடையில் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகும் பொருட்களின் விலையை குறைக்காமல் அப்படியே பழைய விலைக்கே விற்பனை செய்தால் பொது மக்கள் உடனடியாக 1915 என்ற தேசிய கன்ஸ்யூமர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவர்கள் பேரில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் 8800001915 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கும் புகாரின் அடிப்படையில் உடனடியாக அந்த நபர்கள்/நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.