
‘மனித மருந்தா?’ என்று வியப்பாக இருக்கிறதல்லவா?ஆனால், உண்மையில் மனிதர்களே மருந்தாக இருந்து, பல மனித உயிர்களை நோய்களிலிருந்தும் இறப்பிலிருந்தும் காப்பாற்றலாம் என்று சொல்கிறார்கள் மனவியல் வல்லுனர்கள்.
அப்படி மருந்தாக மற்றவர்களுக்குப் பயன்படுபவர்கள், மருத்துவமெல்லாம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லையாம்! மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டாலே போதுமாம்!
கவலையில் உழன்று கொண்டிருப்போருக்கு, அவர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்பதும், ஆறுதலான வார்த்தைகளுமே அவர்கள் ஆற்றாமையைப் போக்கும் அருமருந்தாகும் என்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். தங்கள் நிலை மட்டுமே எவருக்கும் வராத இழிநிலை என்று எண்ணி, அதனைக் கடக்க வழியேயில்லையென்று மனதில் முடிவு செய்து, தற்கொலை ஒன்றே தக்கதாகும் என முடிவெடுப்போரைக் கூட, அந்தத் தருணத்தில் நாம் பேசும் அன்பு வார்த்தைகள் மூலம் அகிலத்தில் வாழச் செய்து விட முடியும்!
சிலர் யதார்த்தமாக இப்படிக் கூறுவதை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருக்கிறோம். “அவர்க்கிட்டக் கொஞ்ச நேரம் பேசினாலே போதும்! டானிக் சாப்பிட்ட மாதிரி ஓர் உற்சாகம் ஒடம்பு பூராவும் பரவிடும்” என்று.
ஏற்கெனவே, நாம் ‘கட்டிப்பிடி வைத்தியம்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். உலக நாயகன் கமல் ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,’ திரைப்படத்தில் அதனைத் தெளிவாகக் காட்டியிருப்பார்! நமது பண்பாட்டில் ‘கை குலுக்குவதும், கட்டித் தழுவுவதும்' பழங்காலம் முதலே இடம் பெற்று வருகின்றன.
அவையும் ஹூமன் மெடிசினின் கூறுகளே! என்ன? அவற்றைத் தடை செய்ய, சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா என்ற கொடிய நோய் வந்தது!
சரி! யாரெல்லாம் மனித மருந்தாக இருக்கத் தகுதியானவர்கள் என்று பார்ப்போமா?
ரொம்ப ஈசிதாங்க! பெரிசா இதற்காக அலட்டிக் கொள்ள வேண்டாம். ஒரு நான்கைந்து குணாதிசயங்கள் நம்மிடம் இருந்தாலே போதும். நாமும் பலருக்கு ஹூமன் மெடிசினாக மாறிப் பயனளிக்கலாம்.
1. எந்த நேரத்திலும், மற்றவர்களுக்காக நேரத்தை ஒதுக்கும் மனநிலை முக்கியமானது.
2. எவ்வளவுதான் முக்கிய வேலையில் இருந்தாலும் அடுத்தவர்கள் பேசுவதை அமைதியாகவும், பொறுமையாகவும் கேட்கும் பாங்கு வேண்டும்.
3. இடையில் குறுக்கிட்டு, அவர்களின் உணர்ச்சிப் பேச்சை உதாசீனப்படுத்தாத தன்மை அதிகமாகவே இருக்கணும்.
4. நமது கருத்துக்கள் எதையும் திணிக்காமல் (Don’t Judge) அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அவர்கள் கூறி முடித்ததும், அன்பாகவும், ஆறுதலாகவும், சற்று உலக அனுபவங்களையும் சேர்த்து, அவர்கள் மனம் திருப்தியும், அமைதியும் அடையும் விதமாக, ஆழமான புண்ணுக்கு மயிலிறகால் மெல்ல மருந்து தடவுவதுபோல், அவர்கள் மனதைத் தொடும் விதமாகப் பேச வேண்டும்.
5. ஒவ்வொருவரும் நம்மை நம்பி அவர்கள் ரகசியங்களைக் கூறுவதால், எக்காரணம் கொண்டும் எந்த நிலையிலும் அந்த ரகசியங்களை வெளியிடாத உறுதியான தன்மை முக்கயம். ’கிணற்றில் போட்ட கல்’ போல, அவர்கள் கூறும் ரகசியங்களை நம் மனதில் புதைத்து விட வேண்டும்.
நீங்கள் எத்தனை பேருக்கு மருந்தாகச் செயல்படப் போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ற மனச் சூழலை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அப்புறமென்ன! நீங்களும் டாக்டர்தான்!
சிரமப்பட்டுப் படித்து நீட் எழுதாமல், நான்கரை வருட மருத்துவப் படிப்பு இல்லாமல், ஹவுஸ் சர்ஜன் தொழில் பார்க்காமல், பிரிஸ்கிரிப்ஷன் எழுதாமல், இப்படி எதுவுமில்லாமலே உயிர்களைக் காக்கும் உயர்ந்த கொடுப்பினை உங்களுக்கு வாய்க்கிறது.
பல மனித உயிர்கள் உங்களால் பயன்பெறும் என்பதை நினைக்கும்போதே நீங்கள் பிறவி எடுத்ததன் பயனை அடைந்து விட்டதாக ஓர் ஆத்ம திருப்தி உங்களுக்குள் தோன்றும். அந்தத் திருப்திக்கு, நாம் வைத்திருக்கும் பணம், செல்வாக்கு என்று எதுவுமே ஈடாகாது!
அத்தோடு நமக்கும் நாலு பேராவது மனித மருந்தாக இருக்கும்படிப் பார்த்துக் கொண்டால், இந்த உலகில் வேறென்ன வேண்டும்?
மனிதத்தைப் போற்றுவோம்! அன்பையும், பொறுமையையும் வளர்ப்போம்! மனித மருந்தாக மாறுவோம்! அனைவரையும் மகிழ்வித்து, நாமும் ஆனந்தமாக வாழ்வோம்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)