மனிதர்களுக்கு பல நூற்றாண்டுகளாக ஒரு கேள்வி இருந்து வருகிறது என்றால், அது ஏலியன் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விதான். அந்தவகையில், நாசா இந்த கேள்விக்கான பதிலை ஆதாரத்துடன் கொடுக்கத் தயாராகி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
ஏலியன்கள் நடமாட்டம் இருக்கிறது என்று எத்தனை பேர் சொன்னாலும், அதற்கான ஆதாரத்தை யாரும் காட்டவில்லை. மேலும், ஏலியனை நேரில் பார்த்தவர்களும் யாரும் இல்லை. ஆனால், எதோ தட்டு பறந்தது, ஒளி தெரிந்தது, ஆகையால், ஏலியன் பூமிக்கு வந்துள்ளனர் என்ற செய்திகளையும் அவ்வப்போது காணமுடியும். அந்தவகையில், தற்போது Europa Clipper விண்கலத்தின் மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதனால், அக்டோபர் 10ம் தேதி திட்டமிட்டப்படி ஏவுதலுக்கு தயாராகயிருப்பது உறுதியானது. நாசாவின் இந்த Europa Clipper திட்டம், வேற்று கிரக வாழ்க்கைக்கான சாத்தியமான இடமாகக் கருதப்படும் வியாழனின் சந்திரனான யூரோபாவை ஆராய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளான வியாழன், பூமியை விட வலுவான காந்தப்புலத்தை கொண்டுள்ளது. இது புலம் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களைப் பிடிப்பதால், ஐரோப்பாவையும் அதன் அண்டை நிலவுகளையும் தொடர்ந்து தாக்கும் தீவிர கதிர்வீச்சை உருவாக்குகிறது. இதனால், அந்த கதிர்வீச்சை எதிர்கொள்ளும் விதமாகத்தான் இந்த விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 10 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. யூரோபாவின் பனி படர்ந்த மேற்பரப்பிற்கு அடியில் வாழ எந்த அளவிற்கு சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பதை இந்த விண்கலம் ஆராய்ந்துவிடும்.
இதன்மூலம் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழக்கூடியதாக இருந்த உலகத்தையும், இன்றைய வாழ்க்கையை ஆதரிக்கம் ஒரு உலகத்தையும் ஆராயலாம். வேற்றுகிரக வாழ்வின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும், நமது சூரிய குடும்பத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதற்கும் இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், இந்த விண்கல ஆராய்ச்சியில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதையும் ஆதாரத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.