போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த பட்டியல் ரெடியாகுது!

TETOJAC Struggle
TETOJAC Struggle
Published on

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை கலைதல், ஊக்க ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவில் ஆசிரியர்கள் நேற்று முன்தினம் விடுமுறை எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் வருகை குறைவு காரணமாக பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தொடக்க கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த பட்டியலை தயார் செய்து அனுப்பவும் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆர்ப்பாட்டம் நடந்த நாளன்று யார் யார்? பள்ளிக்குச் செல்லவில்லை. அதற்கு அவர்கள் கூறுகின்ற காரணங்கள் என்ன? என்பதெல்லாம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் பணியில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அலுவலகம் ஈடுபட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 250 பேர் முதல் அதிகபட்சம் 300 பேர் வரையில் விடுமுறை எடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் அன்றைய தினம் அவரவர் பள்ளிகளில் பாடம் எடுக்காத சூழ்நிலையும், மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது. ஏனெனில் தொடக்க கல்வி என்பது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கும் இடமாகும். அங்கு அவர்களுக்கு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் எப்படி? என்ற கேள்வியை அரசு முன் வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை மகளிர் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து இரண்டு பெண்கள் பலி!
TETOJAC Struggle

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மாநிலம் முழுவதும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெயர்கள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விடுப்பு எடுத்தற்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அதில் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படும் காரணங்கள் திருப்தி இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம். அதுகுறித்து அரசு தான் முடிவெடுக்கும். இதுகுறித்து நாங்கள் எதுவும் தெரிவிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, ஆர்ப்பாட்டம் நடந்த நாள் அன்று உண்மையாகவே மருத்துவ காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்த ஆசிரியர்கள், மருத்துவ சான்றிதழ்களை உடனடியாக பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏனெனில் இந்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் நடவடிக்கை, அரசின் கோபத்தை கிளறி உள்ளது. அதனால் இந்த விவகாரத்தை அரசு சற்று சீரியஸாக கையாளப்பட உள்ளதாகவும், கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் உண்மையிலேயே மருத்துவ காரணங்கள் காரணமாக விடுப்பு எடுத்து இருந்த நபர்கள் மருத்துவ சான்றிதழ் பெற்று அதை தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com