ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போறீங்களா? மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) தடுப்பூசி கட்டாயம்!

Yellow fever
Yellow fever
Published on

- தா. சரவணா

ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே, மஞ்சள் காய்ச்சல் நோய் பரவலை தடுக்க இந்தியாவிலிருந்து அந்நாடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் அந்நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பத்து நாட்களுக்கு பிறகே மேற்கண்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அல்லது மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வர மக்கள் அனுமதிக்கப்படுவர். இது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சான்றிதழ் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் மஞ்சள் காய்ச்சல் விவரங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்து https://ihpoe.mohfw.gov.in/index.php தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் மூன்று தடுப்பூசி மையங்களில் கீழ்க்காணும் ஆவணங்களைக் கொண்டு பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்:

தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்கள், அசல் கடவுச்சீட்டு, சுய விவரங்கள் அடங்கிய தொகுப்பு, மருத்துவ விவரங்கள் (ஏதேனும் இருப்பின்)

1. பன்னாட்டு தடுப்பூசி மையம் மற்றும் கிங் நோய்த்தடுப்பு ஆராய்ச்சி நிலையம், கிண்டி, சென்னை: இங்கு அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான பதிவுகளை நேரடியாக தினமும் காலை 9.30 முதல் 10.00 மணி வரை பதிவு செய்துகொள்ளலாம் அல்லது இணையதளத்தில் www.kipmr.org.in என்ற முகவரியில் தடுப்பூசி பதிவு செய்யலாம். தாமதமாக வரும் பயனாளிகளுக்குத் தடுப்பூசி இருப்பைப் பொறுத்து தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிகளுக்கான கட்டணம் 300 ரூபாய் செலுத்தவேண்டும். மேற்படி கட்டணத் தொகையினை வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ அல்லது ரொக்கமாகவோ செலுத்தலாம்.

2. சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள துறைமுக சுகாதார நிறுவனம்: அனைத்து திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான பதிவுகளை நேரடியாக தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் porthealthofficechennai@gmail.com என்ற முகவரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசிகளுக்குப் பதிவு செய்யலாம். தடுப்பூசி வழங்கப்படும் நாட்களில் தாமதமாக வரும் பயனாளிகளுக்குத் தடுப்பூசி வழங்க இயலாது. தடுப்பூசிகளுக்கான கட்டணம் 300 ரூபாய். இணையம் மூலமாக செலுத்தவேண்டும்.

இதையும் படியுங்கள்:
திருப்பத்தூர் மாவட்டம் 100% தேர்ச்சியுடன் அசத்தும் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகள்!
Yellow fever

3. தூத்துக்குடி புதிய துறைமுகம், உலக வர்த்தக அவென்யூ துறைமுக சுகாதார அமைப்பு எண் பி 20 துறைமுக சுகாதார அதிகாரி அலுவலகம்: அனைத்து செவ்வாய் கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான பதிவுகளை நேரடியாக மட்டும் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம். தாமதமாக வரும் பயனாளிகளுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நாட்களில் மதியம் 12 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும். தடுப்பூசிகளுக்கான கட்டணம் 300 ரூபாய். ரொக்கமாக மட்டும் செலுத்தப்பட வேண்டும்.

எனவே, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளவர்கள். மேற்கண்ட இடங்களில் உள்ள தடுப்பூசி மையங்களை அணுகி, தடுப்பூசி செலுத்திக்கொண்டு சான்றிதழ் பெற்று, பயணம் செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்கண்ட மூன்று இடங்களைத் தவிர, தமிழ்நாட்டில் வேறு எந்த அரசு/தனியார் மருத்துவமனைகளிலும் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்து உள்ள மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com