- தா. சரவணா
போட்டி, பொறாமை, சச்சரவுகளுக்கு மத்தியில் ஜோலார்பேட்டை அரசு மகளிர் பள்ளி சாதனை!
திருப்பத்துார் மாவட்டத்தில் மொத்தம் 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், பிளஸ்2 தேர்வில் 5 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஜோலார்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளில் பிளஸ்2 தேர்வில் 109 பேர் எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில், 152 பேர் எழுதியதில் 151 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வில் 115 பேர் எழுதியதில் 114 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ்2 தேர்வில், இந்தப் பள்ளி 2வது ஆண்டாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் கடந்த ஆண்டு இந்தப் பள்ளியின் சாதனை என்னவென்றால், 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீத தேர்ச்சி. ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் (வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது ஆகும்) இந்தப் பள்ளி மட்டுமே இதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதற்காக இந்தப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி உட்பட 20 ஆசிரிய, ஆசிரியைகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இந்தப் பகுதியில் தனியார் பள்ளிகள் அதிகம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளையும் இந்தப் பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இதனால் ஏற்பட்ட போட்டி, பொறாமை காரணமாகவும், வழக்கமாக நன்றாக பணி செய்பவர்களுக்கு, அதே துறையைச் சேர்ந்த மற்றவர்களால் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவும் இந்தப் பள்ளி நிர்வாகம் கடும் நெருக்கடியை சந்தித்தது. இன்னும் சந்தித்து வருகிறது. ஆனாலும், தங்களுக்கு எந்தப்
பிரச்னை வந்தாலும் சரி, மாணவிகளுக்கு நன்கு கற்றுத் தந்து, அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்பதை மட்டும் தங்கள் பணியின் நோக்கமாகக் கொண்டு இங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியை, ஆசிரிய, ஆசிரியர்கள் சீரிய முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட்...
3 பொதுத் தேர்விலும் நுாற்றுக்கு நுாறு தலைநிமிர்ந்து நிற்கும் மலைக்கிராம பள்ளி!
தமிழகத்தில் பத்து, பிளஸ்1 மற்றும் பிளஸ்2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாநில அளவில், 300க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குறிப்பிடத்தக்க வற்றில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, திருப்பத்துார் மாவட்டம் ஜவ்வாது மலைக்கிராமங்களில் ஒன்றான புதுார் நாடு அருகே அமைந்துள்ள கீழூர் ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளி முழுக்க முழுக்க மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இங்கு 6ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையில் மொத்தம் 263 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பித்துக் கொடுக்க 17 ஆசிரியர்களும், தலைமை ஆசிரியராக லோகநாதன் என்பவரும் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில், இந்தப் பள்ளி 3 பொதுத் தேர்வு முடிவுகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் பிளஸ்2, 31 மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் 40 மாணவர்கள் 10ம் வகுப்பு என பொதுத் தேர்வு எழுதியிருந்தனர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். இது குறித்து தலைமை ஆசிரியர் லோகநாதன் கூறுகையில், "எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நல்ல முறையில் கற்பித்தோம். அவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றனர். மேலும் இவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் மற்றும் கல்லுாரிகள், வேலைவாய்ப்புகளில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து தெளிவாக விளக்கினோம். அவர்களும் நன்றாக படித்தனர். அதனால்தான் இந்த 3 பொதுத் தேர்வு முடிவுகளிலும் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்" என்றார்.