டெல்லி முதலமைச்சர் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்திருக்கிறது. அதேபோல் போராட்டம் நடத்த இந்தியா முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியினரை அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் எதற்குமே ஆஜராகவில்லை. இதனையடுத்து அவர் நேற்று உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “தனக்கு எதிராகக் கட்டாய நடவடிக்கை எதும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால் என்னை அவர்கள் கைது செய்யக்கூடாது என்பதை அமலாக்கத்துறை உறுதி செய்ய வேண்டும். “ என்றுக் கோரிக்கை விடுத்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தள்ளுபடி செய்த உடனே, வாரண்டுடன் அமலாக்கத்துறையினர் மீண்டும் கெஜ்ரிவால் வீட்டை சோதனை செய்தனர். 4 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அதன்பின்னரே அமலாக்கத்துறையினர் அவரைக் கைது செய்தனர். முதல்வராக இருக்கும்போதே அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததால் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ராகுல் காந்தி பேசியதாவது, “கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியைப் பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கி கணக்கை முடக்குவது, ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது என அனைத்தும் செய்தும் கூட ஒன்றிய அரசுக்குப் போதவில்லை. இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்களை கைது செய்வது வழக்கமாகிவிட்டது. “இந்தியா” தக்க பதிலடி கொடுக்கும்.” என்று கருத்துத் தெரிவித்தார்.
அதேபோல் இந்தியா முழுவதுமுள்ள ஆம் ஆத்மி கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய டெல்லி அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான கோபால் ராய் பேசியதாவது, “ விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கெஜ்ரிவாலை கைது செய்தது ஜனநாயக படுகொலை. சர்வாதிகாரிக்கு எதிராக இருப்பவர்கள் இன்றுப் போராட்டத்தில் ஈடுபடலாம். இந்தியா கூட்டணி கட்சிகளையும் போராட்டத்திற்கு அழைக்கின்றோம்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் போராட்டம் தொடங்கியது.
முன்னதாக இந்த கைது குறித்து பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, “ உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. ஆனால் அவருக்கு எதிராக ஒரு ரூபாயைக் கூட கைப்பற்ற முடியவில்லை” இவ்வாறு பேசினார்.
நேற்று இரவு கேரளாவில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் தீப்பந்தம் ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து இன்றுப போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.