உலகை அச்சுறுத்தும் 'அதிதீவிர எல் நினோ': உலக வானிலை அமைப்பின் பகீர் எச்சரிக்கை..!!

2027 பிப்ரவரி வரை அதிதீவிர ‘எல் நினோ’ நிகழ்வு 100% நீடிக்கும் என உலக நாடுகளுக்கு உலக வானிலை அமைப்பு பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல் நினோ | El Nino|பருவமழை பாதிப்பு
எல் நினோ | El Nino|பருவமழை பாதிப்புAI Image
Updated on

வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'எல் நினோ' (El Niño) வானிலை நிகழ்வு மேலும் வலுவடைந்து, அதிதீவிர நிலையை எட்டி 2027 பிப்ரவரி வரை நீடிக்க கிட்டத்தட்ட 100% வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization - WMO) பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகால வானிலை கண்காணிப்பு வரலாற்றில், இவ்வளவு உறுதியான எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல்முறை எனவும் தெரிவித்துள்ளது.

உலக வானிலை அமைப்பின் மிகத் தெளிவான, உறுதியான கணிப்பாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலகப் பெருங்கடல்கள் அசாதாரண வெப்பத்தை சந்தித்து வரும் சூழலில், தொடர்ந்து மாறும் பருவநிலையுடன் இந்த எல் நினோவும் இணைவது பூமிக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் வெப்பமடைவதே ‘எல் நினோ’ எனப்படும் இயற்கையான பருவநிலை நிகழ்வாகும். இந்த வெப்பமயமாதல் வளிமண்டல சுழற்சியை மாற்றியமைக்கிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் மழை பொழியும் இடங்களும், வெப்பம் குவியும் பகுதிகளும் தலைகீழாக மாறக்கூடும்.

தற்போதுள்ள சூழலில் இந்த 'எல் நினோ' நிகழ்வு ஏற்கனவே வலுவடைந்து வருவதுதான் மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. பசிபிக் பெருங்கடலின் அசாதாரண வெப்பம், இந்த 'எல் நினோ'வை அதிதீவிர நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றும், இது 2026-ன் இறுதிக்குள் உச்சத்தைத் தொடக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.

மேலும் இந்த அதிதீவிர எல் நினோ நிகழ்வு வரும் மாதங்களில் மேலும் வலுவடைந்து, 2027ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீடிக்கும். சில நாடுகளில் கடும் வறட்சியும், சில பகுதிகளில் கடும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்பு (பருவமழை பாதிப்பு).

அதாவது, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட மிக அதிக அளவில் வெப்பமடைந்துள்ளது.

எல் நினோ உலகெங்கிலும் உள்ள வானிலை முறைகளை மாற்றி, அதனால் உலகளவில் வெப்பநிலை உயர்வு, சில பகுதிகளை கடுமையான வறட்சிக்குள் தள்ளுகிறது, அதே நேரத்தில் மற்ற பகுதிகள் வலுவான சூறாவளிகளையும் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற (extreme) வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும்.

எல் நினோ
எல் நினோAI image

அதுமட்டுமின்றி இந்த இயற்கை வானிலை நிகழ்வு, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறைந்தபட்சம் அடுத்தாண்டு (2027) பிப்ரவரி வரை நீடிக்கும் என்றும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் (WMO) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.

ஏற்கனவே வெப்பமடைந்து வரும் நமது பூமி, ஒரு சக்திவாய்ந்த எல் நினோவுடன் மோதும் சூழல் உருவாகும்போது, அது வரலாறு காணாத வெப்பத்திற்கும், இயல்புக்கு மாறான மழைப்பொழிவுக்கும் வழிவகுக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள பெரும் கவலையாகும்.

இதற்கிடையே இந்தியாவைப் பொறுத்தவரை, இதனால் ஏற்படும் மிகப்பெரிய கவலை மழைப்பொழிவுதான். ஏனெனில் இந்தியாவின் 2026-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஏற்கனவே தத்தளித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:
‘சூப்பர் எல்-நினோ இன்னும் 2 மாதங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’- டெல்டா வெதர்மேன் வார்னிங்!
எல் நினோ | El Nino|பருவமழை பாதிப்பு

இதற்கிடையே, இந்த ஆண்டின் பருவகால மழைப்பொழிவு நீண்டகால சராசரியில் 90% மட்டுமே இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் மட்டும் 16% மழைப் பற்றாக்குறையுடன் முடிவடைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட இந்த 16% மழைப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த நீர் மேலாண்மை மற்றும் பயிர் விளைச்சலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மழைப்பொழிவு குறைவதால் மண் வளம் காய்ந்து, நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீர்நிலைகளின் கொள்ளளவு குறையக்கூடும்.

எல் நினோ தீவிரமடைவதால், நடப்பு செப்டம்பர் மாதத்தில் வழக்கமான மழையளவில் 91% க்கும் குறைவாகவே மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டின் குளிர்காலம் (Winter) வழக்கமான குளிர்ச்சியின்றி, அதிக வெப்பத்துடன் காணப்படலாம்.

இந்த எல் நினோ நிகழ்வு 2027-ன் தொடக்கம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், அது இந்தியாவின் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவை மேலும் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் நாட்டின் நீர் இருப்பு, விவசாயம் மற்றும் கோடை வெப்பம் தொடர்பான கவலைகள் பன்மடங்கு அதிகரிக்கலாம்.

அதேசமயம், எல் நினோவின் தாக்கம் பசிபிக் பெருங்கடலில் குறைந்தாலும், அதன் வெப்ப விளைவு வளிமண்டலத்தில் நீடிக்கும். இதனால் 2027-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
உலகை மிரட்டும் எல் நினோ மாற்றத்தால் உருவாகும் கடும் வறட்சி மற்றும் வெள்ள அபாயங்கள்!
எல் நினோ | El Nino|பருவமழை பாதிப்பு

2027-ன் முற்பகுதியில் வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (Heatwaves) வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com