வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் உருவாகும் சூப்பர் எல்-நினோ (Super El Niño) நிகழ்வு உலகளவில் தீவிர வானிலை மாற்றங்களையும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அதிக மழைப்பொழிவையும், வெள்ளப்பெருக்கையும் உருவாக்க வாய்ப்புள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தீவிர 'எல் நினோ' (El Niño) தாக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாகக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது 2027-ஆம் ஆண்டை வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக மாற்றக்கூடும்.
மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் எல் நினோ காலநிலை நிகழ்வு ஆகியவை இதற்கு முக்கியக் காரணமாகும்.
சூப்பர் எல்நினோ தாக்கம் காரணமாக தட்ப வெப்ப நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டு உஷார்படுத்தி வருகின்றனர்.
கடும் வெப்பம், வறட்சி, பெரு வெள்ளம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு ஒரு சக்திவாய்ந்த ‘சூப்பர் எல் நினோ’ ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் அதிகளவில் கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர், பசிபிக் பெருங்கடலில் வழக்கத்தை விட முன்கூட்டியே உருவாகியுள்ள 'சூப்பர் எல் நினோ' (Super El Nino) தாக்கம் காரணமாக இன்னும் 2 மாதங்களில் தமிழகத்தில் மழை காலத்தில் மிகப்பெரிய பாதிப்புகள் அல்லது தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளார். அதாவது, வரவிருக்கும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இதன் தாக்கம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
தீவிர வானிலை மாற்றங்கள், அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் இருக்கக்கூடும் என்பதால், பொதுமக்களும் அரசும் முன்கூட்டியே அவசர காலத் தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட சுமார் 2.75°C வரை அதிகரித்து 29.6°C-ஐ எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மிகப்பெரிய சூப்பர் எல் நினோ உருவாகி வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நகர்ந்து வருகிறது. இந்த எல் நினோ நிகழ்வு மேலும் தீவிரமடைந்து நவம்பரில் உச்சத்தை எட்டக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக, இந்த மாதத்திலேயே ஒரு சூப்பர் எல் நினோ முழுமையாக உருவாகி உள்ளது. இந்த மாத இறுதிக்குள், 2015 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ அளவுக்கு இது இருக்கலாம். அல்லது அதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த மேற்கு நோக்கிய காற்று வெடிப்பு தொடர் நிகழ்வாக உள்ளது.
இதன் காரணமாக கெல்வின் அலைகள் உருவாகி, கடலுக்குள் இருக்கும் கூடுதல் வெப்பத்தை மேல்நோக்கி கொண்டு சென்று எல் நினோவின் தாக்கத்தை மேலும் அதிகப்படுத்தும்.
இதன் விளைவாக, மிகப்பெரிய சூப்பர் எல் நினோ நவம்பர் மாதத்திற்குள் உருவாவது உறுதியாகும் எனக் கூறப்படுகிறது. எல் நினோ பூமியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எண்ணி அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் இப்போதே விழிப்புடன் இருந்து தயாராக வேண்டும். இல்லையென்றால், அதன் விளைவுகள் உங்களை கடுமையாக பாதிக்கும்.
எப்போதும் நினைவில் நிற்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான சூப்பர் எல் நினோவின் தாக்கங்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக வேண்டியது அவசியமாகும்.
ஒட்டுமொத்தமாக மழை குறைவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், மழை பெய்யும் காலங்களில் திடீர் தீவிர கனமழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரையில் பருவமழை காலங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த பாதிப்பு இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் இருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக அமைந்துள்ளது.
தற்போது சூப்பர் எல் நினோவால் பெரு வெள்ளம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருப்பது பொதுமக்களிடையே சற்று பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதனை போக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.