
இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தினந்தோறும் ரெயில் சேவையை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது.
மக்களின் பயணத்தை எளிதாக்கும் பொருட்டு 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது IRCTC. இது இந்தியன் ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation)என்பதன் சுருக்கமாகும்.
இந்திய ரெயில்வேக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான IRCTC ரெயில் பயணத்தில் மிகவும் முக்கியமான பணிகளை செய்து வருகிறது. இந்திய ரெயில்வேயில் டிக்கெட் எடுத்தல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை IRCTC வழங்கி வருகிறது. IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்.
மக்களுக்கு உதவும் வகையில் டிக்கெட் புக்கிங்கை எளிதாக்க பல வசதியை வழங்கி வரும் IRCTC தட்கல் டிக்கெட் புக்கிங் முதல் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வரை, டிக்கெட்டுகளை ரத்து செய்வது, PNR நிலையைச் சரிபார்ப்பது என பல சேவைகளை புரிந்து வருகிறது. தினமும் IRCTC தளத்தை வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்-களை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் பயன்பெறும் வகையில், பயணத்தை மிகவும் எளிமையாக்கும் பொருட்டு IRCTC நிறுவனம் தனது புதிய AskDISHA 2.0 என்ற AI அடிப்படையிலான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. AI உதவியுடன் எதையும் டைப் செய்யாமல், உங்கள் குரல் பதிவின் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைப் பெறும் வகையில் வசதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முயற்சியால் படிக்க மற்றும் எழுத தெரியாதவர்களும் பயன்பெற முடியும்.
இந்த AI அம்சம், பயணிகள் பேசுவதன் மூலம் மிக எளியமுறையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து, PNR நிலை, பணம் திரும்பப் பெறுதல் போன்ற அனைத்தையும் செய்ய முடியும். IRCTC இணையதளத்தில் சாட்பாட் மூலம் இதை அணுகலாம். குறிப்பாக இதில் டிக்கெட் பெற ஆதார் அல்லது பான் கார்டு அவசியம். இவை அனைத்தையும் குரல் பதிவின் நடைபெறுவதால் மக்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்று IRCTC தெரிவித்துள்ளது.
இந்த AI மூலம் நீங்கள் பயணம் செய்ய வேண்டிய இடம் மற்றும் தேதியை சொன்னால் போதும் எளிதாக டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். அதேபோல் உங்களின் பயண திட்டம் மாறினால் டிக்கெட்டை ரத்து செய்வதும் மிகவும் எளிது. ஆன்லைன் கட்டணம் செலுத்திய பிறகு, டிக்கெட் முன்பதிவு விபரம் உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும். உங்கள் பயணம் தொடர்பான அனைத்து தகவல்களையும் AI குரல் பதிவின் மூலம் எளிதாக பெற முடியும் என IRCTC தெரிவித்துள்ளது.
இந்த சேவையை எந்த நேரத்திலும் பயன்படுத்தும் வகையில் 24×7 முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. AskDISHA 2.0 என்ற AI உபயோகிப்பதால் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. பழைய நடைமுறையில் நீங்கள் டைப் செய்து ஒவ்வொரு நிலையையும் அடைந்து டிக்கெட் புக் செய்ய குறைந்தது 20 நிமிடம் மற்றும் அதற்கு மேலும் ஆகலாம். ஆனால் AI மூலம் பத்து நிமிடத்திற்குள்ளேயே உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை புக் செய்ய முடியும்.