

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ (Thaaimaaman Thanga Mothira Thittam) பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சரால் துவக்கி வைக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையில், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லது தமிழ்நாட்டில் தற்காலிகமாக வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேலும், இத்திட்டம் ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கே மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதற்கு முன்னர் பிறந்த குழந்தைகளுக்கு இது பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் 21ம் தேதி அரசு மருத்துவமனைகளில் பிரவசித்த குழந்தைகளுக்கு கூட இத்திட்டம் பொருந்தாது.
இத்திட்டம் மக்கள் மத்தியில் அரசு சுகாதார சேவைகளின் நம்பிக்கையை வலுப்படுத்தக் கொண்டுவரப்பட்டது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தங்க மோதிரம் வழங்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டுக்கு 8.4 லட்சம் குழந்தைகள் (Sample Registration System 2024)பிறக்கின்றன. இதில் பாதிக்கும் (4.5 லட்சம்) மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்றன.
தமிழக அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு’ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையில் வசூலிக்கின்றனர்.
சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
அத்துடன், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று அதில் கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை ஏளனம் செய்யும் வகையில் 'குட்டிக்கதை' ஒன்றைக் கூறிப் பேசியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது.
குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலினின் சைகையை சட்டப்பேரவைக்குள் முதல்வர் விஜய் ஏளனம் செய்யும் வகையில் நடித்துக் காட்டியதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை மறைமுகமாகக் கிண்டல் செய்து பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்று திருமாவளவன் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய இதுபோன்ற ஏளனப் பேச்சுகளை, நாட்டின் மிக உயர்ந்த சட்டமன்றத்தில் தவிர்த்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சர் விஜய்க்கு தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் புதிய கூட்டணி மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், தவெக அரசுக்கு ஆதரவளிப்பது குறித்துப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இத்தகையச் சூழலில், விஜய் மீதான திருமாவளவனின் இந்தத் திடீர் கண்டனம் மற்றும் முக. ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசியிருப்பது, தவெக மற்றும் விசிக இடையேயான அரசியல் உறவிலும், திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்விலும் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.