இனி அனுமதி இல்லாமல் நிலத்தடி நீர் எடுத்தால் 20 மடங்கு அபராதம்...சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்..!!

அனுமதி இல்லாமல் நீரை எடுக்கும் வணிக நீர் பயனாளருக்கு, 20 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும் மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
Tamil Nadu Water Resources Management Authority
Water Resources, Assembly
Published on

தமிழகத்தின் மக்கள்தொகையின் வேகமான வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் மீதான நீர் நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நீர் பிரித்தெடுப்பு மற்றும் முறையற்ற நீர் பயன்பாடு ஆகியவை நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சூழலமைப்புகளின் நிலைத்தன்மையை பாதித்துள்ளது.

நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், கழிவு நீர் மற்றும் நீர்பிடிப்புப் பகுதி உள்ளிட்ட நீர் வள ஆதாரங்களை நிர்வகிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவையாக உள்ளது. அதற்காக விரிவான புதிய சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சென்னை நிலத்தடி நீர் சட்டம்-1987 நீக்கப்பட்டுவிடும். இந்த புதிய சட்டம் மூலம் தமிழ்நாடு நீர்வள மேலாண்மை ஆணையம், மாவட்ட குழுக்கள் அமைத்து உருவாக்கப்படும். மாநில மற்றும் மாவட்ட நீர்வளத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

தற்போதுள்ள மற்றும் புதிய, வணிக நீர் பயனாளர்களை ஒழுங்குமுறைப்படுத்தி, அவர்களால் உறிஞ்சி எடுக்கப்படும் நீருக்கான கட்டணம் விதிக்கப்படும். அவற்றோடு, வெள்ள மேலாண்மை நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படியுங்கள்:
பெண்களின் சட்ட உரிமைகள்: சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்!
Tamil Nadu Water Resources Management Authority

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இந்த புதிய சட்டத்தை இயற்றை வகை செய்யும் மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய சட்டத்திற்கு தமிழ்நாடு நீர் வளங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல், மேலாண்மை மற்றும் பெருக்க) சட்டம் என்று பெயர். நீரை கிணறு மற்றும் நீர்வளங்களில் இருந்து உறிஞ்சி எடுப்பது இந்த சட்டத்தின் வரம்புக்குள் வரும். வணிக நோக்கம், வீட்டு உபயோகம் என நீர் பயன்பாடு பிரிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும் சாதி, மதம், வசிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படையிலும் நீர் வளங்களை அணுகுவது, பயன்படுத்துவதில் இருந்து மறுக்கப்படக்கூடாது. நீர்வள மேலாண்மை அதிகார அமைப்பின் தலைவராக தலைமைச்செயலாளர் இருப்பார். நிதித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல அரசுத்துறை செயலாளர்களும் அந்த அமைப்பில் இருப்பார்கள். மாநில நீர்வளக்கொள்கையை உருவாக்கும் அதிகாரம் அந்த அமைப்புக்கு உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் அதிகாரம் பெற்ற அமைப்புகள், எந்தவொரு நிலம், கட்டிடங்களுக்குள் நுழைந்து, கிணறு, மண், நீர்வளங்களை ஆய்வு செய்ய முடியும். சட்டத்தை மீறினால் அங்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பறிமுதல் செய்யலாம். கிணற்றை மூடி முத்திரையிடலாம். மின்சாரம் போன்ற மற்ற சேவைகளையும் நிறுத்தி வைக்க முடியும். இந்த நடவடிக்கைகளுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட நீர் பயனாளருக்கு நோட்டீஸ் பிறப்பித்து விளக்கம் பெறப்படும்.

நீரை நிலத்தில் இருந்து எடுப்பதையும், கொண்டு செல்வதையும் இந்த சட்டம் முறைப்படுத்துகிறது. வணிக நீர் பயனாளர் எவரும், அதிகார அமைப்பின் அனுமதி பெறாமல் நீரை நிலத்தில் இருந்து பிரித்து எடுக்க முடியாது. வேறிடத்திற்கு கொண்டு செல்லவும் முடியாது.

ஏற்கனவே வணிக ரீதியாக நீரை எடுத்து வரும் நீர்ப்பயன்பாட்டாளர்கள், சட்ட அமலுக்கு வந்து 6 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தக நீர் பயனரும், அனுமதியை பெறுவதற்கான கட்டணம், ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பிடம் நேரடியாகவோ, இணையம் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும். கட்டண விவரம், அரசிதழில் வெளியிடப்படும்.

நிலத்தடி நீர்மட்டம் குறைதல், நீரின் தரம் மோசமடைதல், தீங்கு விளைவிக்கும் பிற விளைவுகள் ஆகியவற்றை தடுப்பதற்காக, அந்த நேரத்திலும் அனுமதி உத்தரவை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். அப்பீல் செய்ய முடியும்.

குடிநீர் மற்றும் தொழில் தேவைகளுக்காக நாளொன்றுக்கு 45 லட்சம் லிட்டருக்கு மிகாமல் மேற்பரப்பு நீரை எடுக்க அனுமதி வகுத்தளிக்கப்படும். மாவட்ட கலெக்டர் அதை வழங்குவார். அதற்கும் அதிக நீர் எடுக்கும் பட்சத்தில் அரசு அனுமதி அளிக்கும்.

இந்த அனுமதி சில பிரிவுகளுக்கு தேவையில்லை. அதன்படி, குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாடு, நிலத்தில் இருந்து நீர் எடுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயன்பாடுகள், அரசின் நீர் வழங்கல் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி நிலையம், ஆஸ்பத்திரி, கட்டமைப்புகள், அலுவலகங்கள், நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவைவிட அதிகம் நீர் எடுக்காத தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், சிறிய குடிநீர் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி தேவையில்லை.

அனுமதி இல்லாமல் நீரை எடுக்கும் மற்றும் கொண்டு செல்லும் வணிக நீர் பயனாளருக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 20 மடங்கு அல்லது ரூ.20 ஆயிரம், இதில் எது அதிகமோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும். 2-ம் முறை மற்றும் தொடர்ந்து மீறினால், 40 மடங்கு அல்லது ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதிக நீரை எடுத்தால் ரூ.10 ஆயிரமும், தொடர்ந்து மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடலோர நீர்நிலைகளில் கடல் நீர் புகாமல் தடுப்பது, நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீரை உகந்த முறையில் பயன்படுத்துவது, செயற்கை நீர் செறிவூட்டல், நிலத்தடி நீர் பாதுகாப்பு மண்டலங்களை வரையறுப்பது ஆகியவற்றுக்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
வங்கி சட்ட திருத்த மசோதா 2024 - புதிய வங்கி சட்ட சீர்திருத்தங்களை பற்றி அறிவோமா?
Tamil Nadu Water Resources Management Authority

இந்த சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ஒப்புதல் கிடைத்ததும், அந்த மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாக அமலாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com