
டிச 3, 2024, செவ்வாய்க் கிழமை அன்று இந்திய வங்கி சட்டங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது . இந்த புதிய நடைமுறைகள் வங்கி சட்ட திருத்த மசோதா 2024 என்ற பெயரில் அழைக்கப்படும். நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட மசோதாவில் காலத்திற்கேற்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி சட்டம், வங்கி ஒழுங்குமுறை சட்டம் போன்றவற்றில் மொத்தம் 19 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வங்கிச் சட்டத் திருத்த மசோதா 2024 வரைவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய திருத்தச் சட்டங்களால் இந்திய வங்கித் துறை மேலும் வலுப்பெறும். முதலீட்டாளர்களின் நலனும் பாதுகாக்கப்படும் வகையில் திருத்தப்பட்டது. இந்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதோடு, வங்கிகளின் நிர்வாகத்தையும் மேம்படுத்தும். இது வங்கித் துறையின் ஒழுங்குமுறை கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் பல குறிப்பிடத்தக்க வங்கிச் சட்டங்களைத் திருத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக மசோதாவில் 19 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
சில முக்கியமான திருத்தங்கள்:
வங்கிச் சட்ட திருத்த மசோதா 2024ன் படி, ஒரு வங்கிக் கணக்குக்கு ஒரு நாமினி மட்டுமே முன்பு பரிந்துரை செய்ய முடிந்தது. ஆனால், தற்போது 4 பேரை நாமினிகளாக நியமிக்க முடியும். இதன் மூலம் கணக்கு வைத்துள்ள ஒருவரின் மறைவுக்குப் பின் உரிமை கோரல் எளிதாக்கப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத ஈவுத்தொகை, பங்குகளை மீட்பது, பத்திரங்கள் போன்றவை IEPF எனப்படும் சிறப்பு நிதிக்கு மாற்றப்படும். தகுதியுள்ள வாரிசுகளுக்கு அதை வழங்குவது எளிதாக இருக்கும்.
வங்கி இயக்குநர்களுக்கு 'கணிசமான வட்டி' என்ற சொல் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வங்கியில் இயக்குனரின் சொத்து ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அது கணிசமான வட்டியாகக் கருதப்பட்டது. இப்போது திருத்தத்தில் அந்த வரம்பு ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் நிர்வாகத் தரம் மேம்படுத்தும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலம் அதிகரிக்கப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனர், மாநில கூட்டுறவு வங்கியின் குழுவில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கையாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்குவது என்பதை வங்கிகள் தீர்மானிக்க அதிகாரத்தை வழங்கியுள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். கூட்டுறவு சங்கங்களுக்கு இது பொருந்தாது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் இணக்க அறிக்கைகள் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது மாதம் 15 மற்றும் கடைசி தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கள அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு படிவங்களை மையப்படுத்திய கையாளுதலின் மூலம் நிறுவனங்களுக்கு விரைவான பதிலளிப்பதற்காக ஒரு மத்திய செயலாக்க மையம் (CPC) அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.