இன்று விசாரணைக்கு வரும் சொத்து குவிப்பு வழக்கு: தப்பிப்பாரா அமைச்சர் பொன்முடி?

அமைச்சர் பொன்முடி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
அமைச்சர் பொன்முடி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Published on

திமுகவின் துணை பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி. இவர் கடந்த 1996 - 2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பொன்முடி தனது அமைச்சர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டார்.  

இந்த வழக்கு ஆரம்பத்தில் விழுப்புரம் மற்றும் வேலூர் நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம், ‘இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது. ஆனால், இந்த விடுதலை சந்தோஷம் அமைச்சர் பொன்முடிக்கு அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அதோடு, ‘இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை’ எனவும் குற்றம் சாட்டினார். இது அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் அதிர்ச்சி தலைவலியைக் கொடுத்தது.

அதோடு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் அமைச்சர் பொன்முடி. ஆனால், உச்ச நீதிமன்றம் ‘நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி’ என்று தெரிவித்ததோடு, வழக்கை முறைப்படி சந்திக்கவும் பொன்முடிக்கு அறிவுறுத்தியது.

அதைத் தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் இந்த வழக்கில் சற்று மந்த நிலை ஏற்பட்டது. ஆனால், அவர் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் சென்னை, உயர் நீதிமன்றம் திரும்பியதும், அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு மறு ஆய்வு வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால், ஜனவரி மாதத்துக்குப் பிறகு பல முறை பொன்முடிக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மூடநம்பிக்கையில் மூழ்கிய முட்டாள் தாத்தாவால் நடந்தேறிய கோர சம்பவம்!
அமைச்சர் பொன்முடி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கடைசியாக, கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பொன்முடி தொடர்பான மறு ஆய்வு வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 18 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உறுதியாகத் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது, அமைச்சர் பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்படலாம் என்று அனைவராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு நாட்கள் இந்த  வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கெனவே ஒரு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கிய பிறகே மீண்டும் அமைச்சரானார். அதனால் இந்த வழக்கில் கவனமாக இருக்க வேண்டும் என சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் அமைச்சர் பொன்முடி. ‘மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லாமல் இருக்கலாம்’ என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது. ஆக, மொத்தத்தில் அமைச்சர் பொன்முடிக்கு இந்த வழக்கு பெரும் குடைச்சலாகவே இருக்கும் என்று சட்டத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com