நீலகிரி போறீங்களா ? இன்று முதல் 5 நாட்களுக்கு புதிய போக்குவரத்து கட்டுப்பாடுகள்..!
தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் மற்றும் கேரளாவில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, பள்ளி விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தொடர் விடுமுறையை கொண்டாட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு வரத்தொடங்கி உள்ளனர்.
இதனால் நீலகிரியில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ-பாஸ் மையத்தில் சோதனைக்காக வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்று செல்கின்றன. வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாகனங்கள் வருவதால் இ-பாஸ் சோதனையில் ஊழியர்கள், போலீசார் ஈடுபட்டுள்ளனர். தீவிர இ-பாஸ் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேலும் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நீலகிரியில் அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் இன்று முதல் 5 நாட்களுக்கு (அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-தேதி வரை) புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது,
* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் நுழைய அனுமதியில்லை.
* கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
* மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
* உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்.
* குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு, அவர்கள் அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்.
* அதேபோல், கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரமும், கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் இதுகுறித்து போலீசார் கூறும்போது, தொடர் விடுமுறை காரணமாக சமவெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வாகனங்களை ஓட்டும்போது மிகுந்த கவனமுடன் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தாழ்வான பகுதியில் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.