ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா மக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
உலகம் முழுவதுமே பல நாடுகளில் காலநிலை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்து வருகிறது. எப்போதும் கடுமையாக வெயில் அடிக்கும் பகுதிகளில் மழையும், மழை பெய்யும் பகுதிகளில் வெய்யிலும் என சீரற்ற காலநிலை இருந்து வருகிறது. பாலைவனத்தில்கூட மழை நீர் தேங்கியிருந்தது. இதற்கு காரணம் எல் நினோ நிகழ்வு என்று கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் இயற்கையின் கோரத் தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. சில மாதங்களாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வட மாநிலங்களில் பலத்த குளிர் அலை வீசி வருகிறது. அதேபோல் அமெரிக்காவில் காட்டுத்தீ கோடிக்கணக்கான மதிப்பில் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
அந்தவகையில் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் என்றும் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக அங்குள்ள சிட்னி நகரில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியதில் அங்குள்ள பாரமாட்டா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
மேலும் குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்தன.
தற்போது குயின்ஸ்லாந்தில் வெள்ளம் மோசமாகி வருவதால், ஆஸ்திரேலியப் பிரதான நெடுஞ்சாலையின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் அம்மாநிலத்தில் ஏற்பட்ட மழையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதனால் நீர் மட்டம் உயரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிராந்தியத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே சனிக்கிழமை (01) முதல் 1.3m (4.2 அடி) மழை பெய்து வருகிறது, இதனால் அணைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிகின்றன.
சுமார் 60 ஆண்டுகளில் இந்த முறையே அதிகளவு வெள்ளம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வுப் பணியகம், மூன்று நாட்களில் ஆறு மாத மழையைப் பதிவு செய்ததாக கூறியுள்ளது.