
சமீப காலமாக கிரிக்கெட்டில் ஆண்கள் அணி மட்டுமல்ல பெண்கள் அணியும் சாதனைகளை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 6 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஜனவரி 28-ம்தேதி கோலாலம்பூரில் நடந்த கடைசி ஆட்டத்தில் 150 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை பந்தாடி மெகா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா அணி ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் எடுக்கவிடாமல் தடுக்க நினைத்த இந்தியா அணி பந்துவீச்சில் மாயாஜாலம் செய்து சீரான இடைவெளியில் ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்த்தியது. கேப்டன் கெய்லா ரெய்னேக் மற்றும் கராபோ மெசோ இடையேயான பார்ட்னர்ஷிப் இன்னிங்ஸை சற்று நிலைநிறுத்தியது. இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, 20 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவை வெறும் 82 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் (ஆல்அவுட்) செய்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் மட்டுமே (23 ரன்கள்) எடுத்திருந்தார். தென் ஆப்பிரிக்கா அணி, இன்னிங்ஸ் முழுவதும் இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கடுமையாக போராடியது.
கோங்காடி த்ரிஷா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், வைஷ்னவி சர்மா, ஆயூஷி சுக்லா மற்றும் பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதனையடுத்து 83 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட தொடங்கியது. முதல் இரண்டு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்களை எட்டிய இந்தியா, நான்கு ஓவர்கள் முடிவில் 36/0 என்ற வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில் த்ரிஷா கோங்காடி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 33 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து சுலபமாக வெற்றிக்கனியை சுவைத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்ச ரன்களை எடுத்த திரிஷா தொடர்ந்து 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வந்த இந்திய அணி இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை துவசம் செய்து வெற்றிக்கோப்பையை ருசித்துள்ளது. ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த வெற்றியின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளது மகளிர் கிரிக்கெட் அணி. வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.