
ஸ்ரீ ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி மாநகரம் ஒளி வெள்ளத்தில் மிதக்க உள்ளது. அக்டோபர் 19, 2025 அன்று, ஒரே நேரத்தில் 26 லட்சத்து 11ஆயிரத்து 101 தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. இந்த தீபங்கள் சரயு நதிக்கரையிலிருந்து ராம் கி பைடி, சவுத்ரி சரண் சிங் காட் மற்றும் லட்சுமண கோட்டை வரை ஒவ்வொரு இடத்திலும் ஏற்றப்பட்டு தீப ஒளியால் நிரப்பப்படும்.
தீபம் ஏற்றுவதில் சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சியாக இருந்தாலும் ,சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உகந்த முறையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. இங்கு தீபத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து விளக்குகளும் களிமண்ணால் ஆனவை, பயன்பாட்டிற்குப் பிறகு அவை மீண்டும் மண்ணுடன் கலக்கப்படும். சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க உள்ளூர் எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் பெறப்படுகிறது. சுத்தம் செய்தல் மற்றும் மறுசுழற்சிக்காக 1200 தூய்மை பணியாளர்களையும் 300 வாகனங்களையும் அயோத்தி மாநகராட்சி, பணியில் ஈடுபடுத்துகிறது.
தீபத் திருவிழாவில் பயன்படுத்தப்படும்
26 லட்சம் விளக்குகளில்,16 லட்சம் விளக்குகள் அயோத்தியை சுற்றியுள்ள ஜெய்சிங்பூர், புரா பஜார், கோசாய்கஞ்ச் போன்ற கிராமங்களில் இருக்கும் 40 குயவர்கள் குடும்பங்களால் செய்யப்பட்டது. மீதமுள்ள 10 லட்சம் விளக்குகள் சமூக அமைப்புகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை. இதன் மூலம் சுற்றுப்புற சிறு தொழிலாளர்களின் பொருளாதாரத்தில் ஏற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இந்த விளக்குகளை ஏற்ற 55 லட்சம் திரிகள் மற்றும் 73,000 லிட்டர் எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது.
சாதனை தீபத் திருவிழா , அயோத்தியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் , சமூக அமைப்புகள் , பொதுமக்கள் உள்ளிட்டோர் உள்பட
33,000 தன்னார்வலர்கள் தீபங்கள் ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 17 ஆம் தேதியில் இருந்து ராம் கி பைடியில் விளக்கு அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காட்களில் சுமார் 700,000 முதல் 800,000 வரை விளக்குகள் அலங்கரிக்கப் பட்டிருந்தன.
அயோத்தியில் உள்ள சிறு இடங்களிலும் விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளன.ராம் கி பைடியில் 16 லட்சம் விளக்குகள் , விரிவாக்கப்பட்ட ராம் கி பைடியில் 4.25 லட்சம் விளக்குகள் , சௌத்ரி சரண் சிங் காட்டில் 4.75 லட்சம் விளக்குகள் , பஜன் சந்தியா காட்டில் 5.25 லட்சம் விளக்குகளும் , லக்ஷ்மன் கோட்டை காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1.25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.
தீப ஒளி திருவிழாவில் பாரம்பரிய ஒளியை மட்டுமல்லாது, இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியையும் , நவீன் தொழில் நுட்பத்தின் ஆச்சரியங்களை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், பொதுமக்களுக்காக 3டி ஹாலோகிராபிக் இசை லேசர் நிகழ்ச்சி, 1,100 மேக் இன் இந்தியா ட்ரோன்கள் பங்கு பெறும் வேடிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் 2,100 புரோகிதர்கள் பங்கு பெறும் சரயு ஆரத்தி ஆகியவையும் நடைபெற உள்ளது.