கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் மாறியுள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஐரோப்பாவின் முக்கிய நாடான கிரீஸின் தலைநகரமான ஏதென்ஸ், வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடமாகும். பல்வேறு கதைகள், வரலாற்று கதைகள், பழமைவாய்ந்த கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் என அனைத்தையும் தாங்கி நிற்கும் ஏதென்ஸுக்கு சமீபக்காலமாக வெளிநாடு மக்கள் அதிக அளவு சுற்றுலா செல்கின்றனர்.
இந்தநிலை செவ்வாய்க்கிழமை அன்று ஏதென்ஸ் நகரம் திடீரென்று முழுவதும் அடர்ந்த ஆரஞ்சு நிறத்தில் மாறியது. புராதன ஒலிம்பிக் மைதானம், அகோரா, பார்த்தியான் ஆலையம் உட்பட மொத்த நகரமே ஆரஞ்சு நிறத்தில் மாறியது. இதனால், மக்கள் எதோ ஒரு பெரிய இயற்கைப் பேரிடர் வருவதற்கான அறிகுறி இது என்று நினைத்து பீதியில் இருந்தனர். வீடுகளை விட்டு வெளியே வர கூட அஞ்சினர். மேலும், சுற்றுலா வந்த நிறைய மக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அந்தவகையில், ஏதென்ஸ் நகரின் இந்த நிற மாற்றத்திற்கு என்ன காரணம் என்று அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதாவது,"வட ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியா, உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தக் காலத்தில் மேகக் கூட்டங்கள் நகர்வது வழக்கம். இந்த மேகக் கூட்டத்துடன், சகாரா பாலைவனத்தின் புழுதி மண் துகள்கள் கலந்தால் மேகக் கூட்டங்கள் ஆரஞ்சு நிறமாக மாறும். அப்படியொரு நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்துள்ளது.”
மேலும் இதன் விளைவுகள் பற்றி கிரீஸ் நாட்டு அதிகாரிகள், “மேகத்தில் மண் துகள்கள் அதிகளவில் இருப்பதன் காரணமாக மாசு அதிகரிப்பதுடன் சுகாதார பிரச்சனைகளும் ஏற்படலாம். கண்ணில் மாசு துகள்கள் படும்போது பிரச்சனைகள் வரும். சுவாசப் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், 2018க்கும் பிறகு கிரீஸ் நாட்டைத் தாக்கும் மோசமான புழுதிப் புயல் இது.” என்று கூறினர்.
ஏதென்ஸில் மேலும் இரண்டு நாட்கள் இந்த ஆரஞ்சு நிற வானம் நீடிக்கும் என்று அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தநிலையில் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.