பெங்களூரு நகரின் மிகப் பிரபலமான உணவகம் ‘ராமேஸ்வரம் கஃபே.’ இந்த உணவகத்தின் கிளை ஒன்று அண்மையில் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநில உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 23ம் தேதி அந்த உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அந்த ஆய்வில் அந்த உணவகத்தின் சமையல் அறையில் காலாவதியான மற்றும் தரமற்ற பருப்பு வகைகள், பால் மற்றும் தயிர் வகைகள், மேலும் தரமற்ற அரிசி, வெல்லம் போன்ற உணவுப் பொருட்கள் உணவகத்தின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தரமற்ற மற்றும் காலாவதியான இந்த உணவுப் பொருட்களை, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், உணவு தயாரிப்பாளர்களுக்கான கட்டாய மருத்துவ தகுதிச் சான்றிதழ்களையும் அந்த உணவக நிர்வாகம் அதிகாரிகளிடம் வழங்கவில்லை. அதுமட்டுமின்றி, உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி குப்பை கூடைகளையும் சரியாகப் பராமரிக்கவில்லை என்று தெரிய வந்தது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவக உரிமையாளர்களிடம், கேள்வி எழுப்பிய நிலையில், அந்த உணவகத்தின் உரிமையாளர் ராகவேந்திர ராவ், மன்னிப்பு தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், இது சம்பந்தமாக அவர் பேசி வெளிவந்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், ‘எப்போதும் சிறந்த பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிக்க உறுதி ஏற்றுள்ளோம். சிறிய தவறு செய்துவிட்டோம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அய்யாவின் வழியை பின்பற்றி வருகிறோம் என்பதை எங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் சிறு தவறு கூட செய்யக்கூடாது. இதனை நாங்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம். அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்துமாறு எனது குழுவுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன். நாங்கள் பயன்படுத்தும் அனைத்து மூல பொருட்களும் ப்ரீமியம் தரத்திலானது’ என்று பேசி உள்ளார்.
ஆனால், அதைக்கண்ட பலரும், ‘இவர் செய்த தவறுக்கு வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறாரா அல்லது மிரட்டுகிறாரா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில், அந்த வீடியோவில் அவர் பேசிய பேச்சு அப்படி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.