பெண் குரலில் பேசி பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி!

பெண் குரலில் பேசி பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி!

டலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு பயிற்சி தருவதாகக் கூறி பெண்களிடம் அந்தரங்க புகைப்படங்களைக் கேட்டு மிரட்டியுள்ளார் ஓர் இளைஞர். 

தனது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமென ஆசை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் தற்போதைய உணவு முறையால் உடல் எடை அதிகமாகக் கூடி விடுவதால், இளம் பெண்கள் கூட தனது உடலை நல்ல முறையில் வைத்திருக்க மெனக்கெட வேண்டியுள்ளது. தற்போது இணையத்திலேயே அதிகமாக மூழ்கியிருக்கும் இன்றைய இளம் பெண்கள் உடல் பருமனை எப்படி குறைக்க வேண்டுமென கூகுள் மற்றும் யூடியூபிலேயே தேடி விடுகிறார்கள். 

பல சமூக வலைத்தளங்களிலும் உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை பலர் வெளியிடுகிறார்கள். இதில் சிலர் தங்களை ஒரு நிஜமான உடற்பயிற்சி நிபுணன் போல காட்டிக்கொண்டு, மக்களை ஏமாற்றியும் வருகிறார்கள். இப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்தில் புதுவையில் நடந்துள்ளது. ஒரு இளைஞர், பெண் உடற்பயிற்சி நிபுணர் போல தன்னை காட்டிக்கொண்டு பெண்களிடம் அந்தரங்க போட்டோக்களை வாங்கி மிரட்டியுள்ளார். 

"நீங்க டயட்டே இருக்க வேணாம். நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும், உடல் எடை ஈசியா குறைக்கலாம்" என சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் பதிவிட்டது போன்ற வீடியோ ஒன்று உலா வந்துள்ளது. தனது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்பிய பெண்கள் சிலர், இந்த விளம்பரத்தை நம்பி அதில் கொடுக்கப் பட்டிருந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது அந்த அக்கவுண்ட் வாயிலாக பேசிய பெண் ஒருவர் "நான் சொல்வதை செய்தால் அழகிய உடல் அமைப்பைப் பெறலாம். அதற்காக நீங்கள் உங்களுடைய ஆடையில்லாத புகைப்படங்களை அனுப்ப வேண்டும். உங்கள் உடல் அமைப்பைப் பார்த்து, அதற்கேற்றவாரான உடற்பயிற்சிகளை நான் பரிந்துரை செய்வேன்" என்று சொல்லியிருக்கிறார்.  

இதை நம்பிய சில பெண்கள் தங்களுடைய அந்தரங்க புகைப்படத்தை அந்த பெண் கூறிய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்பியுள்ளனர். பெண் பயிற்சியாளர் தானே என நம்பி, சற்றும் யோசிக்காமல் தனது புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார்கள். புகைப்படம் அனுப்பிய பெண்களுக்கு அடுத்த சில நாட்களிலேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து உங்களுடைய தவறான புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. என்னிடம் அடையில்லாமல் வீடியோ காலில் பேசவில்லை என்றால், இணையத்தில் அனைத்தையும் பதிவேற்றிவிடுவேன் என ஒரு நபர் மிரட்டியுள்ளார். 

இதனால் அதிர்ந்துபோன சில பெண்கள் புதுவை சைபர் கிரைமில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், இன்ஸ்டாகிராமில் பெண்களிடம் உடற்பயிற்சி நிபுணர் போல பேசி அந்தரங்க புகைப்படத்தை வாங்கியது திவாகர் என்ற ஆண் என்பதும், அவர் முத்தியால் பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் கண்டறிந்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் நாம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் அவர்களிடம் நம்முடைய தனிப்பட்ட விவரங்களை பகிர்க்கூடாது. இல்லையேல் இதுபோன்ற ஆபத்துக்களில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com