

பாகிஸ்தானில் இருந்து முன்பு வங்கதேசம் பிரிந்ததை போல தற்போது பலுசிஸ்தான் மாநிலமும் பிரிந்து போக தயாராகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாநிலம் தான் பலுசிஸ்தான். பாகிஸ்தான் விடுதலைப் பெற்ற காலத்தில் இருந்து இன்று வரை அந்த பிராந்தியத்தில் முன்னேற்றம் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் இருந்தது. பாகிஸ்தான் சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் தான் தனது வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து வந்தது. பலுசிஸ்தான் பகுதியை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இந்நிலையில் பலூச் பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக பாகிஸ்தானை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்தனர்.
இந்தியா பாகிஸ்தானை தாக்கிய போது பலூச் ஆதரவு படையினரும் பாகிஸ்தானை தாக்கி வந்தனர். இப்படிப் பட்ட சூழலில், பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்றதாக பலூச் போராட்டக் குழுக்கள் அறிவித்தனர். பலூச் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்ததை அடுத்து, நேற்று சமூக ஊடக தளமான X இல் "பலூசிஸ்தான் குடியரசு" என்ற தலைப்பு பிரபலமாக இருந்தது. பலூசிஸ்தான் கொடியை மக்கள் மகிழ்ச்சியுடன் அசைக்கும் வீடியோக்களும், சுதந்திர பலூசிஸ்தானின் வரைபடமும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
பஹல்காம் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானை தாக்கி நிலைகுலைய வைத்தது. பாகிஸ்தானின் பலவீனமான அந்த சந்தர்ப்பத்தை பலூச் மக்கள் பயன்படுத்திக் கொண்டனர். சுதந்திர பலூசிஸ்தானுக்கான தங்கள் இயக்கத்தைத் தீவிரப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.
பாகிஸ்தானில் இருந்து விடுதலைப் பெற்றதாக, பலூச் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மிர்யார் பலூச் முன்னதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் "பயங்கரவாத பாகிஸ்தானின் வீழ்ச்சி நெருங்கி வருவதால் விரைவில் ஒரு சாத்தியமான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். நாங்கள் எங்கள் சுதந்திரத்தை கோருகிறோம், மேலும் பலுசிஸ்தானின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் டெல்லியில் தூதரகத்தை அனுமதிக்குமாறு இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்." என்று இருந்தது.
மிர்யார் பலூச் பலுசிஸ்தானை அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
"பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் சுதந்திரத்தை அங்கீகரிக்கவும், அங்கீகாரத்திற்கான உங்கள் ஆதரவை வழங்க அனைத்து ஐ.நா. உறுப்பினர்களின் கூட்டத்தையும் கூட்டுமாறு ஐக்கிய நாடுகள் சபையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சொந்த பணம் மற்றும் பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். புதிய நாட்டின் வளர்ச்சிக்காக பில்லியன் கணக்கான நிதி விடுவிக்கப்பட வேண்டும்." என்று அந்த கோரிக்கையில் இருந்தது.
இந்தியாவிற்கு ஆதரவளிக்கும் விதமாக பலூச்சி மக்கள் பதாகைகளை ஏந்தியிருக்கும் புகைப்படங்களையும் மிர்யார் பகிர்ந்துள்ளார். தங்களது நாட்டின் முதல் தூதரகத்தை இந்தியாவில் திறக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவிற்கு முழு ஆதரவையும் தருவாகவும் கூறியுள்ளார். ஆனால், இது பற்றி இந்தியா எந்த பதிலும் அளிக்க வில்லை ஐ.நா சபையும் இதற்கு உரிய பதில் அளிக்கவில்லை.