ஏற்கனவே சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இரண்டு இந்திய மசாலா பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. இதனையடுத்து தற்போது நேபாளத்திலும் அந்த மசாலா பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மிகவும் முக்கியமான மசாலா பொருட்கள் எம்டிஹச் மற்றும் எவரெஸ்ட். இவர்களின் தயாரிப்புகள் இந்தியாவில் பயன்படுத்துவதோடு, சில உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில், இந்த மசாலா பொருட்களில் அதிகமாக சில கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் அந்தப் பொருட்களுக்குத் தடைவிதித்தன.
அந்தவகையில், தற்போது நேபாளத்திலும் இந்த மசாலா பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரு நிறுவனங்களுக்கும் தடை விதிக்க அந்நாட்டின் உணவுத் தரக் கட்டுப்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் ஆகிய இரண்டு இந்திய மசாலா பிராண்டுகளின் இறக்குமதி, பயன்பாடு மற்றும் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இவ்விரண்டு மசாலா பொருட்களிலும் எத்திலீன் ஆக்ஸைடு அளவுக்கு அதிகமாக இருப்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்நாட்டின் உணவு தரக் கட்டுப்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் கூறுகையில், "நேபாளத்தில் எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் பிராண்டு மசாலா பொருட்கள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், இந்தத் தடை விதிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே இந்தத் தடையை அறிவித்துவிட்டோம். இந்தத் தடை இப்போது நேபாளத்தில் அமலில் இருக்கிறது.
அதேபோல இந்த இரு நிறுவனங்களின் மசாலா பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இரண்டு பிராண்டுகளின் மசாலா பொருட்களில் சோதனை நடத்தி வருகிறோம். அதன் இறுதி அறிக்கை வரும் வரை தடைத் தொடரும். ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன. அதன் அடிப்படையிலேயே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்." என்று பேசினார்.
பொதுவாக மசாலா பொருட்களில் எந்த அளவிற்கு எத்திலீன் ஆக்ஸைடு இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபட்டிருக்கும். 0.73% - 7% வரையே எத்திலீன் ஆக்ஸைடு இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதி இருப்பதும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த நாடுகளில் தடை செய்யப்பட்ட மசாலா பொருட்கள் என்பது இந்தியாவின் மொத்த மசாலா ஏற்றுமதியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.