

அங்கீகாரம் இல்லாத மனைகள் தொடர்பான பாத்திரங்களை பதிவுக்கு ஏற்க கூடாது. அப்படியே பதிவானால் சம்பந்தப்பட்ட பத்திரங்கள் ரத்து செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கிரிமினல் வழக்கு பதியப்படும் என்று பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் சட்டப்படி முழுமையாக பதிவு செய்யப்படாததால், அந்த மனைக்கு உரிமை உங்களுடையது என்பதை அதிகாரப்பூர்வமாக நிரூபிப்பது கடினமாகும். அதுமட்டுமின்றி, மனை யாருடையது என்ற தெளிவு இல்லாததால், சொத்தின் உரிமையாளர் இறந்த பிறகு, வாரிசுகள் இடையே பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதுடன், குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடுகள், சட்ட வழக்குகள் போன்றவை உருவாகவும் காரணமாகிறது.
எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரி நீதிமன்றத்தை அணுகினால், சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும். அத்துடன், சொத்துகளை வாங்குவதிலும் விற்குவதிலும், வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற முயல்வதிலும் பல சிக்கல்களும் ஏற்படுகின்றன.அங்கீகாரம் இல்லாத மனைகளில் அபகரிப்பு,மோசடி போன்ற பிரச்சனைகளும் அதிகளவு ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் விற்பனை பதிவு செய்ய 2016-ல் தடை விதிக்கப்பட்டது. இதை அமல்படுத்தும் வகையில் பதிவு சட்டத்தில் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சார்-பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தல்கள் வழங்கினார். இருப்பினும் சில இடங்களில், அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக நகர், ஊரமைப்பு துறை, பதிவுத்துறையில் புகார் செய்தது.
இந்நிலையில் முறையற்ற அங்கீகாரம், வரன்முறை சான்றிதழ் இல்லாத, மனை பத்திரங்களை பதிவு செய்ய ரியல் எஸ்டேட் ஆணையம் தடை விதித்ததையடுத்து இதுபோன்ற மனைகள் பத்திர பதிவுக்கு வருவது குறைந்துள்ளது.
ஆனாலும் சில இடங்களில் வீட்டுமனை என்று குறிப்பிடாமல் வீட்டு மனை பத்திரங்களை சார்-பதிவாளர்கள் பதிவு செய்வதாக புகார்கள் எழுந்த நிலையில், அனைத்து சார்-பதிவாளர்கள் அலுவலகங்களில், புதிய அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும், அங்கீகாரமில்லாத மனை பத்திரங்கள் பதிவு செய்யப்படமாட்டாது என்பதை வலியுறுத்தும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில், ‘அங்கீகாரம் இல்லாத வரம்முறை செய்யப்படாத, வீட்டு மனை விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டால் அதை சார்-பதிவாளர்கள் ஏற்கக்கூடாது என்றும் மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தால் சம்பந்தபட்ட பத்திரம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஆவணத்தாரார்கள் உட்படி அனைவர் மீதும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.