இளையராஜாவை தொடர்ந்து நீதிமன்றம் சென்ற கமல்ஹாசன்: இனி கமல் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை..!

kamal
kamal
Published on

நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், தனது அனுமதி இன்றி தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். திரையுலகில் தனக்கென இருக்கும் நற்பெயரையும், அடையாளங்களையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்திப் பிறர் ஆதாயம் அடைவதைத் தடுக்க வேண்டும் என்பதே இந்த வழக்கின் முக்கிய நோக்கமாகும்.

தனது மனுவில், சென்னையில் செயல்பட்டு வரும் 'நீயே விடை' என்ற நிறுவனம், தனது புகைப்படம், பெயர் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமான தனது திரைப்பட வசனங்களை அனுமதி இன்றி பயன்படுத்தி டி-ஷர்ட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம் மட்டுமன்றி, வேறு எந்தவொரு வணிக நிறுவனமும் தனது அடையாளங்களை வருமானம் ஈட்டும் நோக்கில் பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் குரல் உள்ளிட்ட அடையாளங்களை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். முன்னதாக இசையமைப்பாளர் இளையராஜாவும் தனது பாடல்கள் மற்றும் காப்புரிமை தொடர்பாக இதே போன்ற சட்டப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் வழங்கிய இந்த உத்தரவில் ஒரு முக்கியத் தளர்வையும் அறிவித்துள்ளனர். கமல்ஹாசனின் புகைப்படங்களை அப்படியே வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை விதித்தாலும், அதேசமயம் கார்ட்டூன் வடிவங்களில் கமல் புகைப்படங்களை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக, 'நீயே விடை' நிறுவனம் இந்த மனு குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. அண்மையில் இசையமைப்பாளர் இளையராஜா இதே போன்று வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்..! 99% மாரடைப்புக்கு இந்த ‘4’ விஷயங்கள் தான் காரணம்: ஆய்வில் தகவல்..!
kamal

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com