இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களான Myntra மற்றும் Ajio ஆகியவை துருக்கிய ஆடை பிராண்ட்களின் விற்பனையை நிறுத்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.
சமீபத்தில் இந்தியா நடத்திய இராணுவ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தியப் பொதுமக்கள் மத்தியில் துருக்கிக்கு எதிரான கருத்து வலுத்துள்ளது. இதன் விளைவாக, சமூக வலைத்தளங்களில் துருக்கிய பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன.
இந்த எதிர்ப்பின் எதிரொலியாக, Myntra நிறுவனம் Trendyol உள்ளிட்ட அனைத்து துருக்கிய பிராண்டுகளையும் தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது. Trendyol நிறுவனம் சீனாவைச் சேர்ந்த Alibaba குழுமத்தின் ஆதரவைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான Ajio தளத்தில் Koton, LC Waikiki மற்றும் Mavi போன்ற பிரபலமான துருக்கிய பிராண்டுகளின் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பிராண்டுகளின் பொருட்கள் "இருப்பு இல்லை" என்று காட்டப்படுகின்றன.
Myntra நிறுவனம் உள்நாட்டில் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாவிட்டாலும், பதற்றம் அதிகரித்தவுடன் துருக்கிய பிராண்டுகளின் தெரிவுநிலையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், வியாழக்கிழமைக்குள் முழுமையாக நீக்கியதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட கால அடிப்படையில் பிராண்டுகளுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Ajio நிறுவனம் இதுகுறித்து ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய நலனே தங்களுக்கு முதன்மையானது என்றும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப தங்களது தளத்தில் உள்ள பொருட்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ரிலையன்ஸ் நிறுவனம் துருக்கியில் தனது அலுவலகத்தையும் மூடியுள்ளது.
இந்திய வணிகர்களின் கூட்டமைப்பான CAIT (Confederation of All India Traders) துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் பொருட்களை முழுமையாகப் புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 125க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் இந்த நாடுகளுடனான அனைத்து வகையான வணிகம், சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்த உறுதியேற்றுள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கையானது இந்திய நுகர்வோர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் துருக்கி மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. மேலும், ஈ-காமர்ஸ் நிறுவனங்களின் இந்த முடிவு துருக்கிய ஃபேஷன் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.