2024 முதல் 2025ம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பிற்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியிலேயே வங்கிக் கணக்குத் தொடங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2024ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளியிலேயே வங்கிக் கணக்குத் தொடங்கித்தர வேண்டும். மேலும் நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கும் வசதிகள் செய்யப்படும்” எனக் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் முயற்சியால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கல்வி எந்தக் காரணத்தினாலும் சூழ்நிலைகளாலும் கெடாமல் இருக்க உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் ஆகியவற்றை நேரடியாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள 'நேரடி பயனாளர் பரிவரித்தனை' (DBT) முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மூலமாக வங்கிக் கணக்குத் தொடங்கப்படுவதோடு ஆதார் கார்டும் புதுப்பித்தல் செய்யப்படும். அப்போதுதான் ஆதாரை வங்கி கணக்குடன் இணைக்க முடியும். இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிரமம் படத் தேவையிருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரசின் உதவித்தொகைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போதும் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும்போதும் தேவைப்படும் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் போன்ற நான்கு சான்றிதழ்களும் அவசியமாகின்றன. இந்த நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அரசு இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கான வசதிகளும் கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.