சாராய வியாபாரிகள் 50 பேர் வங்கி கணக்கு முடக்கம்; வேலூர் மாவட்ட போலீசார் அதிரடி!

VelloreKallacharayam
VelloreKallacharayam
Published on

கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 60க்கும் அதிகமானவர்கள் கடந்த மாதம் பலியானார்கள். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக அந்தந்த லோக்கல் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இணைந்து எங்கெங்கெல்லாம் ஊறல் போடப்படுமோ, கள்ளச்சாராயம் காய்ச்சப்படுமோ, அந்த பகுதிகளுக்கு சென்று  தீவிர கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். இப்போதும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, சிறையிலும் அடைத்து வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்த மட்டில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அது சில நாட்களுக்கு மட்டுமே மக்கள் மனதில் பரபரப்பாக பேசப்படும். அதன் பின்னர் இதைக் காட்டிலும் வேறு ஏதாவது ஒரு விஷயம் நாட்டில் நடந்து விட்டால், மக்கள் அதன் பக்கம் திரும்பி விடுவார்கள். அதன் பின்னர் நடந்த தவறையும் மறந்து விடுவார்கள். இதை கணக்கில் வைத்து தான் பலர் தொடர் தவறுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் 60க்கும் அதிகமான உயிர் பலி கொண்ட கருணாபுரம் கள்ளச்சாராயப் பிரச்சனை அவ்வளவு எளிதாக நாம் மறந்து விடக்கூடாது. ஏனெனில் 21ஆம் நூற்றாண்டில் சாராயம் குடித்து பலி என்றால் இதைக் கேட்கும் பலர் கேலிக்கூத்தாக தான் நம்மை பார்ப்பார்கள். இதை போலீசாரும் எளிதாக விட்டு விடக்கூடாது. தொடர்ந்து மலைப்பகுதிகளில் சோதனை நடத்தி கள்ளச்சாராயம் குறித்த ஞாபகமே சாராய வியாபாரிகளுக்கு வராத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
News – 5 (30-07-2024) தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானங்களுக்கு நடிகர் கார்த்தி கண்டனம்!
VelloreKallacharayam

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் பகுதிகளில் அமைந்துள்ள மலைவாழ் பகுதிகளில் கள்ளச்சாராயம் படு பிரபலம். இதையும் தாண்டி வேலூர் மாவட்டம் ஆந்திர மாநிலத்திற்கு அருகில் உள்ளதால் அங்கிருந்தும் கள்ளச்சாராயம் கடத்தி  கொண்டுவரப்படுகிறது. இதனால் கடத்தல் சாராயமா காய்ச்சிய சாராயமா என்பதை போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து இரு வகை சாராயத்தையும் அதன் பயன்பாட்டையும் தீவிரமாக தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

கள்ளச்சாராய வியாபாரிகள் கையில் பணம் புரண்டால்தான் அவர்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியும். இதை கருத்தில் கொண்ட மாவட்ட போலீஸ், தங்கள் வசம் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகள் பட்டியலில் உள்ள முதல் கட்டமாக 50 பெயர்களின் வங்கி கணக்கை முடக்கியது. இது சாராய வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட போலீசார் கூறுகையில், மாவட்டத்தில் யார் யாரெல்லாம் சாராய வியாபாரிகள் என்ற கணக்கு எங்களிடம் உள்ளதோ, அத்தனை நபர்களின் வங்கி கணக்குகளும் முடக்கும் பணி நடந்து வருகிறது என்றனர்.                             

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com