
கடந்த வருடத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவ இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பையை வென்ற பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், சூர்யகுமார் யாதவுக்கு டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றதால், டெஸ்ட் கேப்டன்ஷியை ஏற்றார் சுப்மன் கில்.
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் ரோஹித் சர்மா, வருகின்ற 2027 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறார். ஆனால் அதற்குள் அவர் 40 வயதை எட்டிய விடுவார் என்பதால், பிசிசிஐ அவரை அணியில் வைத்திருக்க விரும்பவில்லை. இதனால் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் விடை பெறுவார் என்ற பேச்சுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் உலா வரத் தொடங்கியுள்ளன. அதேசமயம் அவர் ஓய்வை அறிவித்து விட்டால் அடுத்த ஒருநாள் கேப்டன் யார் என்ற கேள்விக்கு இப்போதே தயாராகி விட்டது பிசிசிஐ.
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் கேப்டன் பதவியையும் சுப்மன் கில்லுக்கே வழங்க பிசிசிஐ நினைக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த தேர்வாக இருப்பார் என பிசிசிஐ கருதுகிறது. அதோடு 3 வடிவ கிரிக்கெட்டிலும் சுப்மன் கில்லிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என பிசிசிஐ மீது முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஆகையால் தான் ஸ்ரேயஸ் ஐயரை ஒருநாள் கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையெனில், பிசிசிஐ அவரை ஓய்வு பெறச் சொல்லி அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. டெஸ்ட் போட்டியிலும் பிசிசிஐ கொடுத்த அழுத்தத்தால் தான் ரோஹித் ஓய்வு பெற்றார் என்ற கருத்துகள் தீயாகப் பரவின. தற்போது ரோஹித்தின் ஒருநாள் கிரிக்கெட் பயணத்தையும் முடித்து வைக்க பிசிசிஐ தயாராகி விட்டது போல. அணியின் நலன் கருதி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பது நல்லதாகவே பார்க்கப்பட்டாலும், சீனியர் வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல என்று முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு அடுத்தடுத்து இரண்டு உலக்கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, எப்போது ஓய்வு பெறுவார் என்ற மனநிலையில் தான் பிசிசிஐ உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஒருவேளை ரோஹித் ஓய்வு பெற்று விட்டால், விராட் கோலிக்கும் நெருக்கடி அதிகரித்து விடும். இந்நிலையில் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிச்சயமாக ரன்களைக் குவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பை டி20 தொடரில் ஸ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஒருநாள் கேப்டன் பதவிக்கு இவரது பெயர் அடிபடுவது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி, துலீப் டிராபி மற்றும் ஐபிஎல் என பல தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ரோஹித், கோலியின் கிரிக்கெட் பயணம், அடுத்த ஒருநாள் கேப்டன் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.