
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இருவரும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, ஒருநாள் கிரிக்கெட்டிலும் இளம் வீரர்களை சேர்க்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணமும் விரைவில் முடிவுக்கு வந்து விடுமோ என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களைக் குவிப்பதோடு, அணிக்கும் வெற்றியைத் தேடித் தருகின்றனர். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் முழுக்க முழுக்க இளம் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆகையால் தற்போது இவர்கள் இருவரும் ரன்களைக் குவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். வருகின்ற அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் ரன் குவிக்கவில்லை எனில், அடுத்து வரும் போட்டிகளில் அவர்களின் இடம் கேள்விக்குறியாகி விடும்.
பிசிசிஐ கெடுபிடியால் இருவரும் ஓய்வு முடிவை எடுத்து விட்டால் ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷன் கிசான் உள்ளிட்ட பல இளம் தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ஆனால் விராட் கோலி ஓய்வு பெற்றால் அவரது இடத்தை நிரப்புவது கடினம் என பிசிசிஐ நினைக்கிறது. இதற்காக இப்போதே விராட் கோலியின் இடத்தில் விளையாட ஒரு வீரரை தயார் செய்ய வேண்டும் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இதற்காக ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் ரஜத் பட்டிதாரை தேர்ந்தெடுத்து இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இவருக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற இரு ஜாம்பவான்களை ஒருநாள் தொடரில் எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் ஒருபுறம் காத்திருக்க, பிசிசிஐ-யின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் மற்றும் கோலி இருவரும் விளையாடுவது உறுதி என்பதே தற்போதைய தகவல். இருவரும் இந்தத் தொடரில் குறைந்தது ஒரு சதத்தையாவது அடிக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இல்லையெனில் இரு ஜாம்பவான்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிசிசிஐ ஓரங்கட்டும் என்பதில் ஐயமில்லை.
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாட கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும் அதற்குள் ரோஹித்திற்கு 40 வயதும், கோலிக்கு 38 வயதும் ஆகி விடும் என்பதைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களை களமிறக்க பிசிசிஐ திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.