அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக தற்போது இது அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்தின்படி மாடு ஒரு புனித விலங்காகும். எப்படி இஸ்லாமிய மதத்தில் பன்றி இறைச்சியை சாப்பிடுவது பாவமாக கருதப்படுமோ அதேபோல் ஹிந்து மதத்தில் மாட்டிறைச்சி உண்பது பாவமாகும். ஆனால், இப்போது அந்த நம்பிக்கையெல்லாம் மாறிவிட்டது. எப்படி கோழி மற்றும் ஆட்டிறைச்சி சாப்பிடுகிறார்களோ, அதேபோல் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் வழக்கமாகிவிட்டது. மேலும் ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம் என்பதால், பல இடங்களில் இதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை.
அந்தவகையில் தற்போது அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அசாம் முதலமைச்சர் மாநில அமைச்சர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ஏற்கனவே அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்பட்டது. கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது இந்த கட்டுப்பாடுகளை மேலும் வலுபடுத்தியுள்ளோம். அதாவது அசாம் மாநிலம் முழுவதுமே பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்க சாப்பிட என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். விதிகளை மீறுபவர்கள் சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்படுவர். காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலரும் மாட்டிறைச்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால், அதற்கு முன்னர் நாங்களே அதை தடை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம்.” என்று பேசினார்.
மேலும் அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021இன் படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் தற்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.