

இந்தியாவின் பாரம்பரிய பானங்களுள் ஒன்று டீ என்று அழைக்கப்படும் தேநீர், உலகின் கவனத்தை தற்போது பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டேஸ்ட் அட்லாஸ் (TasteAtlas) தரவரிசையில் மசாலா சாய் (Chai Masala) உலகின் சிறந்த தேநீர் வகையாக தரவரிசையில் முதலிடத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் இந்தியாவின் தேநீர் கலாச்சாரத்திற்கு கிடைத்த பெரும் பெருமையாக கருதப்படுகிறது.
இந்த சாதனை பார்வையாளர்களின் மதிப்பீடுகள், நிபுணர்களின் கருத்துகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உணவு விமர்சனங்களின் அடிப்படையில் மசாலா சாய் 5-க்கு 4.4 புள்ளிகள் பெற்றதன் மூலம் முதலிடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இதுவரை உலகினரிடையே பிரசித்தி பெற்ற பிற முன்னணி தேநீர் வகைகளான ஜப்பானின் ஹோஜிச்சா (Hōjicha)செஞ்சா (Sencha) ,இலங்கையின் சிலோன் பிளாக் டீ மற்றும் சீனாவின் பு-எர்ஹ் (Pu'erh) ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி மசாலா சாய் முதலிடத்தை பிடித்துள்ளது சிறப்பு.இதனுடன் இந்தியாவின் பிற தேநீர் வகைகளும் உலக தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. டார்ஜிலிங் தேநீர் (6வது இடம்), அஸ்ஸாம் சாய் (13வது இடம்), கேரளாவின் சுலைமானி (39வது இடம்), காஷ்மீரின் நூன் சாய் (43வது இடம்) என பிற பாரம்பரிய இந்திய தேநீர்களும் இந்த டாப் 100 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் டாப் 10 மசாலா தேநீர் வகைகளில் சில இங்கு.
மசாலா தேநீர் (Masala Chai)
இந்தியாவின் மிகவும் பிரபலமான பாரம்பரிய பானங்களில் ஒன்றான இது கருப்பு தேயிலையுடன் பால் மற்றும் பல்வேறு நறுமண மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக ஏலக்காய், இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு போன்றவை இதில் பயன்படுத்தப்படுகின்றன.
இஞ்சி மசாலா டீ
புதிய இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் இந்தத் தேநீர் சளி, இருமல் போன்ற கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக அமைவதால் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இது மிகவும் பிரபலம்.
ஏலக்காய் டீ
ஏலக்காயின் அலாதியான நறுமணமே இதன் முக்கிய சிறப்பாகும்.. வட இந்தியா மற்றும் மேற்கிந்தியாவில் பரவலாக அருந்தப்படுகிறது.
கடக் மசாலா சாய்
அதிக தேயிலை, தடிமனான பால் மற்றும் வலுவான மசாலா கலவையுடன் தயாரிக்கப்படும் இந்தத் தேநீர், தற்போதைய இளைஞர்களை அதிகம் கவர்கிறது. இது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் புகழ்பெற்றது.
மிளகு மசாலா டீ
மருத்துவ குணம் கொண்ட கருமிளகு சேர்க்கப்படுவதால் காரமான சுவை கிடைக்கும். மழைக்காலங்களில் விரும்பி அருந்தப்படுகிறது.
சஃப்ரான் மசாலா சாய்
குங்குமப்பூ சேர்த்துத் தயாரிக்கப்படும் விலை அதிகமான தனிச்சிறப்புமிக்கத் தேநீர் இதுவாகும். இது காஷ்மீர் மற்றும் வட இந்தியப் பகுதிகளில் மிகவும் பிரபலம்.
துளசி மசாலா டீ
துளசி இலைகள் மற்றும் மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு மருத்துவ தேநீராகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
காஷ்மீரி கஹ்வா
பால் சேர்க்காமல் பச்சை தேயிலையுடன் குங்குமப்பூ, ஏலக்காய், பாதாம் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படும் காஷ்மீரின் பாரம்பரிய தேநீராகும்.
அசாம் மசாலா சாய்
அசாம் மாநிலத்தில் விளையும் கருப்பு தேயிலையின் தனித்துவமான சுவையுடன் தயாரிக்கப்படும் இந்த தேநீர் உலகளவில் இந்திய தேநீரின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது எனலாம்.
மும்பை கட்டிங் சாய்
மும்பை தெரு தேநீர் கடைகளின் அடையாளமாகக் கருதப்படும் இந்த தேநீர் சிறிய கண்ணாடியில் அரை அளவாக வழங்கப்படும்.
இன்னும் எலுமிச்சை சேர்த்து தயாரிக்கும் லெமன் டீ, புதினா டீ , செம்பருத்தி டீ என புதிது புதிதான சுவைகளில் வலம் வருகிறது பாரம்பரிய பானம் சாய்.