

நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக, டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரஞ்சனி ரங்கா (Judge Rajani Ranga), போக்சோ (POCSO) வழக்கின் கீழ் பாதிக்கப்பட்ட ஒரு 10 வயது சிறுமியின் துணிச்சலான சாட்சியத்தை ஏற்று, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் அவளுக்கு ஒரு நெகிழ்ச்சியான கடிதத்தையும் தீர்ப்புரையில் எழுதி அனுப்பியுள்ளார்.
இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அபூர்வமான நெகிழ்ச்சி சம்பவம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துள்ளது.
2023-இல் பாலியல் வன்கொடுமை நடந்தபோது சிறுமிக்கு 7 வயது. தற்போது 10 வயதாகும் அந்தச் சிறுமி நீதிமன்றத்திற்கு நேரில் வந்து, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகத் தைரியமாக சாட்சியம் அளித்துடன் நீதிபதியிடம் உருக்கமான கோரிக்கையும் வைத்தார். அந்த சிறுமிக்கு 7 வயதாக இருந்தபோது, அவள் நம்பிக்கையோடு பழகிய சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளார்.
இந்த POCSO வழக்கு நடந்த போது, சிறுமி தைரியமாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணையின் போது சிறுமி நீதிபதியிடம், ‘என்னை சீரழித்த அந்த மாமாவை, நான் வளர்ந்து பெரியவள் ஆகும் வரை (அவர் வயதாகும் வரை) சிறையிலிருந்து வெளியே விடக்கூடாது‘ என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார். சிறுமியின் தைரியமான சாட்சியத்தை ஏற்றுக் கொண்ட டெல்லி சிறப்பு நீதிமன்றம், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
சிறுமிக்கு நியாயம் வழங்கும் வகையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி ரஞ்சனி ரங்கா, நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக, தனது தீர்ப்புரையின் இறுதியில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்
சிறுமிக்கு நீதிபதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பெற்ற மகளே... இந்த நீதிமன்றம் நீ பேசியதை முழுமையாகக் கேட்டது. 'அந்த மாமாவுக்கு வயதாகும் வரை அவர் சிறையிலேயே இருக்க வேண்டும்' என்று நீ விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு பதில் அளித்துள்ளது.
இன்று இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ‘நீ 'மாமா' என்று அழைத்த அந்த நபர் இனி ஒருபோதும் சுதந்திர மனிதனாக வெளியில் வர முடியாது. அவர் தனது மீதி வாழ்நாள் முழுவதையும் ஒரு கூண்டுக்குள்ளேயே (சிறையில்) கழிப்பார், அங்கேயே வயதாகி இறந்து போவார். இனி அவனால் உன்னையோ, உனது தங்கைக்கோ அல்லது வேறு எந்தக் குழந்தைக்கோ தீங்கு இழைக்க முடியாது.
இந்த நீதிமன்றம் கண்டதிலேயே மிகவும் தைரியமான சிறுமி நீதான். நீ நீதிமன்றத்திற்கு வந்து, உனக்குத் தீங்கு இழைத்த அந்த நபரைச் சுட்டிக்காட்டி, உண்மையை தைரியமாகச் சொன்னாய்.
இந்த நீதிமன்றத்தால் உன்னுடைய இழந்த குழந்தைப்பருவத்தை உனக்குத் திருப்பித் தந்துவிட முடியாது. ஆனால் உனது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நீதி வழங்கப்பட்டுள்ளது.
இப்போது உனது வாழ்க்கையை நீ மகிழ்ச்சியாக வாழத் தொடங்கு. பள்ளிக்குச் செல், புதிய நண்பர்களை உருவாக்கு, சிரித்து மகிழ்ந்து விளையாடு, பல கனவுகளைக் காண். உன்னுடைய இந்த அசாத்திய துணிச்சலை இந்த நீதிமன்றம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்’ என்று நீதிபதி ரஞ்சனி ரங்கா தனது கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் இந்த உருக்கமான கடிதத்தை டெல்லி உயர் நீதிமன்றமும் வெகுவாக பாராட்டியுள்ளது.
மேலும் குற்றவாளி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் அவனது மனுவை நிராகரித்தது.
மேலும், இந்த தீர்ப்புரைக் குறிப்பை வெறும் சட்ட ஆவணமாக மட்டும் விட்டுவிடாமல், 10 வயதாகும் அந்த சிறுமிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘துணிச்சலின் செய்தி’ (Message of Encouragement) என்று பாராட்டி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு (DLSA) மூலம் அந்தச் சிறுமிக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10.50 லட்சம் இழப்பீட்டுத் தொகையுடன் சேர்த்து, இக்கடிதத்தையும் அச்சிட்டு அவளிடம் 2 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கமாகத் தீர்ப்புகளில் சட்ட ரீதியான பிரிவுகள் மட்டுமே இடம் பெறும் சூழலில், பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையைத் தேற்றும் வகையில் நீதிபதி எழுதிய இந்த நெகிழ்ச்சியான குறிப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் நெகிழ்ச்சியான, ஒரு குழந்தையை மையப்படுத்திய நீதிக்கான ஒரு முன்மாதிரியாக இது பார்க்கப்படுகிறது.