

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம், பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இனிவரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டால் மட்டுமே, பணியாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்ள முடியும் என முன்னணி தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஏஐ உச்சி மாநாடு இந்தியாவில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (பிப்ரவரி 20) முடிவடைந்தது. இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்ட நிலையில், செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த முதலீடுகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகின.
இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு டிசைனிங் சாஃப்ட்வேர்களை இலவசமாக வழங்கும் அறிவிப்பை ஏஐ உச்சி மாநாட்டில் ADOBE நிறுவனம் அறிவித்தது
டிசைனிங் துறையில் ADOBE நிறுவனத்தின் அனைத்து சாஃப்ட்வேர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சாப்ட்வேர்களை அணுக குறிப்பிட்ட அளவில் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையை வழங்கி உள்ளது ADOBE நிறுவனம். அதாவது இனி 20-க்கும் மேற்பட்ட ADOBE சாஃப்ட்வேர்களை இந்திய மாணவர்களால் இலவசமாக பயன்படுத்த முடியும்.
இதுகுறித்து ADOBE நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், மாணவர்களுக்கு உதவ ADOBE நிறுவனம் முன்வந்துள்ளது.
இதன்படி InDesign, Photoshop, Illustrator, Acrobat, Firefly AI மற்றும் Premiere Pro உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ADOBE சாஃப்ட்வேர்களை அங்கீீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இந்திய அரசுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும்.
மேலும், NASSCOM உடன் இணைந்து AI First Learning சான்றிதழ் படிப்புகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்” என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது
டிசைனிங் துறையில் ADOBE சாஃப்ட்வேர்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதால், மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்திய மாணவர்கள் தங்களது படைப்பாற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதோடு வேலைவாய்ப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ADOBE சாஃப்ட்வேர்களை மாணவர்கள் முன்கூட்டியே கற்றுக் கொள்வதன் மூலம், வேலைவாய்ப்பில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறவு உச்சி மாநாடு நன்முறையில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தை வளர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இனி மத்திய பட்ஜெட்டில் ஏஐ துறையை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன