

தமிழ்நாட்டில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக உதயமான தமிழக வெற்றிக் கழகத்தில், முன்னணி கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் பலத்தோடு வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தவெக தயாராகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி செங்கோட்டையன் இணைந்த பிறகு, மேலும் சில அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப அதிமுக நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகரன் தவெக-வில் நேற்று இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை தவெக கூட்டணியில் இணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தவெக-வில் இணைந்திருப்பது, ஓபிஎஸ்-இன் வருகையை உறுதிப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இது உண்மைதானா அல்லது வதந்தியா என்பதற்கு தவெக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில், தவெக கட்சியின் பலம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தவெக-வில் இன்னும் பல அதிமுக நிர்வாகிகள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக-வை அடுத்த அதிமுக-வாக மாற்றுவேன் என செங்கோட்டையன் தெரிவித்தது போலவே, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
ஒருபுறம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் இருவரையும் தவெக-வில் இணைக்க செங்கோட்டையன் முயன்று வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், தவெக தலைவர் விஜய் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் காங்கிரஸ் திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணி வைத்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக-விடம் ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தவெக-வுடன் கூட்டணியில் சேர காங்கிரஸ் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது உண்மையா அல்லது வதந்தியா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
தவெக சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள் விழா, ஈரோடு கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன், வேலு நாச்சியாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பிறகு தவெக - காங்கிரஸ் கூட்டணி குறித்து விளக்கமளித்த செங்கோட்டையன், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் கருத்துகளைக் கூறலாம். ஆனால் தவெக தலைவர் விஜய்யுடன் நடைபெறுவது தான் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையாக இருக்கும். தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
ஒவ்வொரு இயக்கமும் ஒன்றிணைந்து செயல்படுவது அவரவர் முடிவு. ஆகையால் தவெக-வில் காங்கிரஸ் இணையுமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் புரட்சிகரமானதாக இருக்கும்.
புதிய வரலாற்றைப் படைக்கும் தலைவராக, பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக எதிர்காலத்தில் விஜய் திகழ்வார்” என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.