
நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண். தொற்று கிருமிகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் நமது கண்கள் விரைவில் பாதிப்படையக் கூடும். அதிலும் குறிப்பாக நாம் எங்கேனும் வெளியே சென்று வந்தால் காற்றில் உள்ள தூசிகள், அழுக்குகள் மற்றும் புகை போன்றவை நம் கண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதோடு நாள்தோறும் நாம் பயன்படுத்தும் செல்போன்களால் கூட கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும்.
இதனை நாம் அப்படியே விட்டு விட்டால், அடிக்கடி இந்த தொந்தரவு ஏற்பட்டு பின்னாட்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆகையால் கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டால், உடனே அதற்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அவ்வகையில் கண்களில் ஏற்படும் அரிப்பை இயற்கையாகவே போக்கும் 8 குறிப்புகளை இப்போது காண்போம்.
கண்களில் அரிப்பு ஏற்பட்டால் உடனே பலரும் கைகளால் தேய்த்து விடுவார்கள். அப்போது தான் பலருக்கும் திருப்தியாக இருக்கும். ஆனால் இப்படிச் செய்வதால் பாதிக்கப்படுவது நம்முடைய கண்கள் தான்.
சில நேரங்களில் கைகளில் இருந்தும் தொற்றுகள் பரவுகின்றன. இதனால் கண்கள் வீங்கியும், சிவப்பாகவும் காணப்படும். ஆகையால் முடிந்தவரை கைகளைக் கழுவி விட்டு கண்களில் அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக தேய்க்கலாம். கண்களை கசக்கக் கூடாது.
கண்களில் தற்காலிகமாக ஏற்படும் இந்த அரிப்பைத் தடுக்க இயற்கையான சில வழிமுறைகளைப் பயன்படுத்தினாலே போதும். இருப்பினும் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியதும் அவசியம்.
1. கண்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்க ரோஸ் வாட்டர் உதவுகிறது. இதனை நேரடியாக கண்களில் பயன்படுத்தாமல், தண்ணீரில் கலந்து காட்டன் துணியால் நனைத்து, கண்களைத் துடைத்து எடுக்கலாம். ஒரு வாரம் இதனைத் தொடர்ந்து செய்து வந்தாலே, கண் அரிப்பு நீங்கும்.
2. மாட்டுப் பாலை துணிகளில் நனைத்து, கண் இமைகளின் மீது துடைப்பதன் மூலமும் கண் அரிப்பைத் தடுக்கலாம்.
3. உப்பு கலந்த சுடுநீரை பஞ்சு துணியால் நனைத்து, கண்களின் மீது வைத்தால் அரிப்பு குணமாகும்.
4. எலுமிச்சை சாறைக் கொண்டும் கண்களைத் துடைத்து எடுக்கலாம். இம்முறையில் கண்களில் உள்ள அழுக்குகள் எளிதில் வெளியேறி, எரிச்சலையும் போக்கி விடும்.
5. குளிர்ச்சியான தயிரைக் கண்களின் மீது தடவி சிறிது நேரம் அப்படியே இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் கண்களைத் துடைத்து எடுக்க கண் அரிப்பு நீங்கும்.
6. சீரகத் தண்ணீர் செரிமானத்திற்கு மட்டுமின்றி, கண்களை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. தினசரி இரண்டு முறை சீரகத் தண்ணீரால் கண்களைக் கழுவி வர கண் அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும்.
7. ஐஸ் கட்டிகளை துணியால் சுற்றி, கண்களின் மீது ஒத்தடம் கொடுப்பதன் மூலமும் கண் அரிப்பைக் குணப்படுத்தலாம்.
8. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைக்க வேண்டும். இதன்மூலம் வறண்டு போன கண்கள் குளிர்ச்சியைடந்து கண் எரிச்சல் மற்றும் அரிப்பு விரைவில் குணமாகும்.
மேற்கண்ட தீர்வுகள் அனைத்தும் தற்காலிகமான கண் எரிச்சலுக்கு மட்டுமே சரியாக இருக்கும். ஒருவேளை கண்களில் தொற்றுப் பிரச்சினை அதிகமாக தென்பட்டால், உடனடியாக கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது தான் சிறந்தது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.