

உலக அளவில் பொருளாதாரச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. தொடர் விலையேற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்யும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்ய முன்பணம் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்பணம் செலுத்துவதன் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதால், ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தங்கம் மற்றும் வெள்ளியின் தொடர் விலையேற்றம், சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறு முதலீட்டாளர்களும், சாமானிய மக்களும் கூட, தற்போது ஆர்வத்துடன் முதலீடு செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தியன் ரிசர்வ் வங்கி, புதிய அன்னிய செலாவணி விதிமுறைகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. இதில் பண மோசடிகளை தடுக்கும் விதமாக, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கு தடை விதித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது.
இறக்குமதியாளர்கள் சிலர் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்வதற்கு முன்கூட்டியே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணம் செலுத்தி விடுகின்றனர். பணம் செலுத்திய பின்பும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்யப்படாததால், இதில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் எழுந்தன.
இதனைக் கருத்தில் கொண்டே தற்போது இறக்குமதிக்கு முன்பே பணம் செலுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நம் நாட்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பிறகு, அதிக அளவிலான இறக்குமதி தங்கத்தில் தான் நடக்கிறது. ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளியை அதிகம் கொள்முதல் செய்த நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்த பிறகே, இறக்குமதியாளர்கள் பணப்பரிமாற்றம் செய்ய வங்கிகள் அனுமதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய உத்தரவால், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி தாமதமாகும் என்றே கருதப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் இறக்குமதியாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் அந்நிய செலாவணி விதிமுறைகளில் சில தளர்வுகளை வழங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதன்படி மூன்றாம் தரப்பினர் வாயிலாக பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் வருகின்ற 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது