இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 17 ஆயிரம் வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவர்களெல்லாம் யார்? இதன் பின்னணி என்ன என்று பார்ப்போமா?
இந்த டிஜிட்டல் உலகில் ஏராளமான மோசடிகள் தினம் தினம் நடைபெற்று வருகின்றன. பலரிடம் ஆசை வலைவிரித்து, கோடிகணக்கில் வருமானம் ஈட்டலாம் போன்றவற்றைக்கூறி, அவர்களின் ஆசையைத் தூண்டி ஏமாற்றுகிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் முதல் போன் செய்து ஒரு பின் நம்பர் மூலம் வரை ஏராளமான கைவரிசையை கையில் வைத்திருக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்பவர்களிடம் காசு மட்டும் வாங்கிவிட்டு பழைய பொருட்களைக் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.
எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலுமே மக்கள் இந்த வலையில் விழத்தான் செய்கிறார்கள்.
சமீபத்தில்கூட ஒரு சீன நாட்டவர் இந்தியர்களிடம் 100 கோடி மோசடி செய்திருக்கிறார்.
இப்போது இந்தியா முழுவதும் டிஜிட்டல் மோசடி கைது என்ற பெயரில் இயங்கி வந்த 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மோசடி கைது என்றால் மோசடியாளர்கள் காவல்துறை அல்லது நீதித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் போல, சாதாரண மக்களிடம் பேசி, அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, பெரிய அளவில் பணத்தை பரிமாற்றம் செய்தால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம் என ஏமாற்றுவதாகும்.
இந்த வாட்ஸப் கணக்குகளை யார் இயக்குகிறார் போன்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. அதில் இந்த வாட்ஸ் ஆப் கணக்குகள் பெரும்பாலும் கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து நாடுகளிலிருந்து இயக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது. மேலும் இத்தனை கணக்குகளும் வெறும் குற்றச்செயலுக்காக மட்டுமே இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த மோசடிகள் பலவும், கம்போடியாவில் இருக்கும் சீன காசினோக்களில் இயங்கும் கால் செண்டர்கன் மூலம் நடப்பது தெரியவந்துள்ளது. மேலும் வேலை வாங்கித் தருவதாக பலரையும் கம்போடியா வரவழைத்து அங்கு அவர்களும் இந்த மோசடிகளில் வலுகட்டாயமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.