இந்தியாவில் பிறப்பு சான்றிதழ் ஒவ்வொருவருக்கும் மிகவும் கட்டாயமான ஆவணமாகும். பிறப்புச் சான்றிதழ் (Birth certificate), ஒரு குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் முக்கிய ஆவணம் ஆகும். இதில் பிறந்த குழந்தையின் பிறந்த தேதி, இடம், பெற்றோர் பெயர் மற்றும் பிற தகவல்கள் பதிவு செய்யப்படும். இந்தியாவில் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ், கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் திருமண பதிவு போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழ் கருதும் சட்டம் 2023 முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு, குழந்தை பிறந்த மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட பிறப்பு பதிவு மையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பிறப்பு சான்றிதழ் விண்ணப்பத்துடன் பிறந்த குழந்தையின் அடையாளச் சான்று, பெற்றோரின் அடையாளச் சான்று மற்றும் பிறப்புக்கான சான்றுகள் போன்றவற்றை அதனுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பல மாநிலங்களில், பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. இந்த நடைமுறை எல்லாம் முடிந்து பிறப்பு சான்றிழ் கிடைக்க கிட்டதட்ட ஒன்றில் இருந்து இரு மாதங்கள் வரை ஆகும். அதற்கு மேலும் ஆகலாம்.
இந்நிலையில் இந்த நடைமுறையை எளிமையாக்கும் பொருட்டு மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் பிறப்பு சான்றிதழக்காக பலமாதங்கள் அலையவேண்டியதில்லை. பிறப்பு சான்றிதழ் பெறுவது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அரசு மருத்துவமனைகளில் புதிதாக பிறக்கும் குழந்தைகளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பே பெற்றோரிடம் அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழை வழங்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிதாக பிறந்த குழந்தையின் பிறப்பு சம்பந்தமான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்டவுடன், பிறப்பு சான்றிதழ் வழங்கும் பதிவாளர் மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குள் கண்டிப்பாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பெற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நடைமுறை எளிமையாக்கினால் வரும் தலைமுறையினருக்கு பல நன்மைகள் உண்டாகும் என்பதாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் அண்மை காலமாக பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பிறகு உடனடியாக வழங்குவது அவசியம் என ஆர்ஜிஐயின் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்றும் இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும் என்றும் இந்திய பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட குழந்தை பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நடைமுறை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் மக்களிடையே அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.