பிறப்பு விகிதம், மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாக உள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றெடுக்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்து வருவதே பிறப்பு விகிதம் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
கருவுறுதலுக்கும் பொருளாதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வளர்ந்த நாடுககள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ள நிலையில், ஏழை நாடுகளில் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் மட்டும் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
பெண்கள் கல்வி கற்று, பொருளாதார சுயசார்பு பெறுவதால், அவர்கள் வேலை செய்யவும், சம்பாதித்து சுயமாக வாழவும் விரும்புகின்றனர். அந்த சூழ்நிலையில், குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடுகின்றனர். ஏனெனில் குழந்தை பிறந்தால் அது அவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
தற்போது உலகளாவிய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 2.4 ஆக உள்ளது. இந்த விகிதம் 1950-ல் 4.7 என்ற விகிதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது என ஐ.நா. சபை மற்றும் உலக வங்கி, இந்திய சுகாதாரத்துறை ஆகியவை கணித்து உள்ளது.
ஆனால் தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் சரிவடைந்து கொண்டே செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால் 2024-ம் ஆண்டில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளனர். இதன்மூலம் குழந்தைகள் பிறப்பில் தமிழகம் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
அதன்படி 2019-ம் ஆண்டுடன், 2024-ம் ஆண்டினை ஒப்பிட்டால் 1 லட்சத்து 3 ஆயிரத்து 880 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது. இது 11 சதவீத சரிவு ஆகும். அதேவேளையில் 2024-ம் ஆண்டினை 2023-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது. இது 6.71 சதவீத சரிவு ஆகும்.
தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்ததற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:-
* தமிழக அரசு, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் தம்பதிகளிடையே நாம் இருவர், நமக்கு ஒருவர் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.
* பெண்களுக்கான கல்வி வளர்ச்சி மற்றும் குடும்ப வளர்ச்சியின் மீது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை பிறப்பை தள்ளி போடுகிறார்கள்.
* திருமண வயது அதிகரிப்பு காரணமாக, பெண்களின் குழந்தை பெற்றெடுக்கும் காலம் குறைந்துள்ளது.
* நவீன வாழ்க்கை முறைகள் காரணமாக சிறிய குடும்பங்களை தான் அதிகம் விரும்புகிறார்கள். எனவே ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ளும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
* பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது. பெண்கள் வேலை வாய்ப்பின் மேம்பாடு காரணமாக குழந்தைகள் வளர்ப்பதற்கான நேரத்தை கட்டுப்படுத்தி உள்ளன.