ஜனவரி 23-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி! புதிய கூட்டணிக்கு அச்சாரமா..?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வரும் முன்னரே ஆளுங்கட்சியான தி.மு.க., எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பணிகளில் களம் இறங்கி விட்டன.

தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணிக்காக பல்வேறு கட்சிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இருந்து தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றங்களும் நிகழவில்லை என்றாலும் இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகள் வெகு ஜோராக நடைபெற்று வருகின்றன.

அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் பாஜக, டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. அணி, புதிய நீதிக்கட்சியுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை வந்த பா.ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியதுடன், கூட்டணியை வலுப்படுத்த தே.மு.தி.க. உள்ளிட்ட மேலும் சில கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளிடம் அ.தி.மு.க. சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!
பிரதமர் மோடி

தேர்தல் நெருங்குவதால் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகளின் பார்வை தமிழ்நாடு பக்கம் திரும்பி உள்ளதுடன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், கடந்த 4-ம்தேதி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின், ‘தமிழகம் தலை நிமிர தமிழ்நாட்டின் பயணம் யாத்திரை' நிறைவு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்ட நிலையில் பா.ஜனதா தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுரையில் வரும் 23-ந்தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

23-ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி ஓபிஎஸ் மற்றும் தேமுதிகவும் பிரதமர் மோடி முன்னனியில் கூட்டணியில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற தேமுதிக பொது கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்து விட்டதாகவும், அதை ஒரு நல்ல நாளில் அறிவிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். தற்போது பிரதமர் மோடியின் மதுரை நிகழ்ச்சி தற்போது சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதை பார்க்கும் போது இந்த கூட்டணி குறித்து அறிவிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் அரசியில் வட்டாரத்தில் உலா வருகிறது.

மற்றொருபுறம் தவெக தலைவர் விஜய்யின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை தான் தற்போது அனைத்து கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. சமீபத்தில் விஜய் காங்கிரஸ் கட்சியுடன் பேசினார் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்டாலும், நேரடியாக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, ராகுல் காந்தி, 'ஜனநாயகன்' திரைப்படத்தை தடுக்க முயற்சிப்பது, தமிழ் கலாசாரத்தின் மீதான நேரடி தாக்குதல் என விஜய்க்கு ஆதரவாக, பேசியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கு முன்னதாகவே, 'ஜனநாயகன்' திரைப்பட விவகாரத்தில் தணிக்கை வாரியத்தின் நடவடிக்கை, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். அந்த வரிசையில், தற்போது நேரடியாகவே ராகுல் காந்தியே ஆதரவு தெரிவித்திருப்பது, அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும், தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான நெருக்கம் குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் ஏற்கனவே விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த பதிவு திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைக்கு எது பேசினாலும் பிரச்சனையாகும் என்பதால், சிபிஐ விசாரணை, ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்பது தான் தற்போதைய எண்ணம் என்பதால் விஜய் அமைதி காப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் தங்கிய விஜய்.! அரசியல் காரணமா? பரபரப்பு தகவல்.!
பிரதமர் மோடி

எப்படி இருந்தாலும் வரும் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை கட்சிகள் இடையேயான கூட்டணி குறித்த பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com