

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மதியழகன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் விசாரித்தனர்.
இந்நிலையில் அடுத்ததாக தலைவர் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டிருந்தனர். இதன்படி நேற்று சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு வந்த விஜய் 11:30 மணிக்கு ஆஜரானார். சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை முன்வைததனர். இதற்கு பொறுமையாக பதில் அளித்தார் விஜய். சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை தொடர்ந்தது.
மேலும் இன்றும் விசாரணை தொடரவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்றைய விசாரணையை பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு வைத்துக் கொள்ளுமாறு சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் கோரிக்கை வைத்தார்.
விஜய்யின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தள்ளி வைத்தனர். நேற்றைய சிபிஐ விசாரணை முடிந்த பிறகு சென்னைக்கு திரும்பாமல் டெல்லியிலேயே ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கினார் விஜய்.
தவெக தலைவர் விஜய் டெல்லியில் தங்கியதற்கான பின்னணி என்ன என்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று இரவு தவெக நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் மற்றும் ஜனநாயகன் திரைப்பட சென்சார் விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களுடன் விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனையில் சில அரசியல் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்னமும் தவெக-விற்கு தேர்தல் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், இது குறித்த ஆலோசனையையும் மேற்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. நேற்று இரவு ஆலோசனையை முடித்த பிறகு, டெல்லியிலேயே தங்கினார் விஜய். இந்நிலையில் இன்று சென்னைக்கு திரும்ப உள்ளார் தவெக தலைவர் விஜய்.
சிபிஐ விசாரணை முழுமையாக முடிந்த பிறகே, கரூர் விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபுறம் ஜனநாயகன்பட ரிலீஸ் தள்ளிப்போனது, மறுபுறம் சிபிஐ விசாரணை என இரண்டையும் சமாளித்து வரும் விஜய்யின் அரசியல் வேகம் துளியும் குறையவில்லை. ஏற்கனவே தவெக சார்பில் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 12 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார் விஜய்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கட்சிகளும் தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாத நிலையில், தவெக-வின் தேர்தல் அறிக்கை வெளியானால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது