கிருமிகளின் கூடாரமாக இருக்கும் போர்வைகள். ஆய்வில் கண்டுபிடிப்பு!

கிருமிகளின் கூடாரமாக இருக்கும் போர்வைகள். ஆய்வில் கண்டுபிடிப்பு!

கிருமிகள் என்றாலே நமக்கு கழிவறைதான் ஞாபகம் வரும். ஆனால் கழிவறையில் இருப்பதை விட ஒரு மாதம் பயன்படுத்தும் போர்வைக்குள் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருக்கும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தினசரி எட்டு மணி நேரம் உழைக்கிறோம் என்றால், அதே 8 மணி நேரம் தூங்குவதற்காகவும் செலவிடுகிறோம். ஆனால் உழைக்கும் போது அணியும் உடைகளை தினசரி துவைக்க எண்ணும் நாம், தினசரி எட்டு மணி நேரம் உருண்டு புரளும் தலையணை, போர்வை போன்றவற்றை இறுதியாக எப்போது துவைத்தீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா?. குறைந்தது நாம் பயன்படுத்தும் போர்வையை தினசரி சுத்தம் செய்தாவது பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை. சிலரெல்லாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ஒரு வருடத்திற்கு ஒருமுறைதான் போர்வை தலையணை உரையை துவைக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நாம் தினசரி பயன்படுத்தும் போர்வை குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 

ஜேசன் டெட்ரோ என்ற நுண்ணுயிரியல் நிபுணரின் கருத்துப்படி, நம் பயன்படுத்தும் போர்வைகளில் 10 கோடிக்கும் அதிகமான பாக்டீரியா இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது நம்முடைய பிரஷ் ஸ்டாண்டில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை விட ஆறு மடங்கு அதிகம் என சொல்லப்படுகிறது. ஒரு வாரம் பயன்படுத்திய போர்வையில் 40 லட்சம் பாக்டீரியாவும், இரண்டு வாரம் பயன்படுத்திய போர்வையில் 50 லட்சம் பாக்டீரியாவும், மூன்று வாரம் பயன்படுத்திய போர்வையில் 90 லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் தலையணை உரைகளிலும் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கிறதாம். அதன்படி, நான்கு வாரங்கள் பயன்படுத்திய தலையணை உரையில் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அந்த ஆய்வாளர். இந்த கிருமிகள் எங்கிருந்து வருகிறது எனும் கேள்விக்கு, அதை நாம் தான் கொண்டு வருகிறோம் என அவர் கூறுகிறார். நாம் தூங்கும்போது வரும் உமிழ்நீர், வியர்வை போன்றவை பாக்டீரியா உருவாவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. 

எனவே, ஒவ்வொரு வாரமும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளை மாற்றி பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் இவற்றைத் துவைத்து பயன்படுத்தினால், இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com