நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் ரத்ததானம் மற்றும் நலத்திட்ட உதவிகள்.

நடிகர்  விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் ரத்ததானம் மற்றும் நலத்திட்ட உதவிகள்.
Published on

சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும் மக்கள் மனங்களை எளிதில் கவரும் ஒன்றாக இருந்து வருகிறது. அந்தக் காலம் முதல் கதாநாயகராக நடிக்கும் நடிகர்களை நிஜவாழ்விலும் ஹீரோக்களாக எண்ணி அவர்களின் ரசிகர்களாக மாறியவர்கள் எண்ணற்றவர்கள். அன்றைய எம்ஜிஆர் முதல் இன்றைய ரஜினி வரை சினிமாவை அடித்தளமாக பொதுவாழ்வில் புகழ் பெற்றவர்கள் தங்களை அடையாளப்படுத்திய இந்த சமூகத்துக்கும் நன்மைகளை செய்தார்கள், செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் தனது செயல்களால் மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வரும் நடிகர் விஜயின் பிறந்த நாளான இன்று அவரின் ரசிகர்கள் நாள் முழுவதும் செய்யும் நற்பணிகள் பற்றிய சேலம் செய்தி இது.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கமாக விஜய் ரசிகர்களின்  “விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது என்று இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலகமெங்கும் வாழும் தமிழர்களும் இதயத்தில் வாழும் பாசமிகு தலைவர் விஜய். அவரது பிறந்த நாளில் சேலம் மாவட்டத்தில் “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்'' எனும் உயரிய லட்சியத்துடனும் “வாழும் வரை ரத்த தானம் வாழ்ந்த பின் உடல் தானம்” எனும் கொள்கை பிடிப்போடும் வாழும் விஜய் ரசிகர்களாகிய நாங்கள் மாபெரும் ரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு அயோத்தியா பட்டினம் நகரம் ஒன்றியம் மற்றும் சார்பு அணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. இந்த ரத்ததான முகாம் சேலம் அயோத்தியாப்பட்டினத்தில் உள்ள ஏவிஎஸ் கலை கல்லூரியில் நடைபெறுகிறது.

     இதன் தொடர்ச்சியாக சேலம் அம்மாபேட்டை சாய்பாபா கோவிலில் தளபதி விஜய் பெயரில் அபிஷேகம் ஆராதனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். வாழப்பாடி ஒன்றியத்தில் காலை 7 மணிக்கு பேளூர் ஈஸ்வரன் கோவிலில் விஜய் பெயரில் அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்படவுள்ளது. வீரகனூரில் காலை 10 மணிக்கு 500 மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மாபேட்டை பகுதியில் காலை 8 மணிக்கு வள்ளலார் மடத்தில் 500 பேருக்கு அன்னதானமும் சிறப்பு பூஜை நடைபெறும். சேலம் மாநகர குட்டிக்கரடு தஞ்சம்பட்டியில் 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும், கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதான மற்றும் இனிப்பும் வழங்கப்படும்.

சங்ககிரியில் காலை 10 மணி அளவில் 700 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்படும். மொத்தத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் மக்கள் தலைவர் விஜயின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இன்றைய தினத்தில் சேலம் மாவட்ட மக்களின் பசியை போக்கும் இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் எழுச்சி பெற்று உள்ளது. இதன் மூலம் மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கமாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. தலைவரின் அரசியல் வருகை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

விஜய் -தமிழன் பார்த்திபன்
விஜய் -தமிழன் பார்த்திபன்

     விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அவர் பெயரில் சேலம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள அவரின் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அன்னதானங்களையும் வழங்கி வருவது பாராட்டுக்குரியதே. நல்ல செயல்கள் செய்யவும் ஒரு தூண்டுகோல் தேவையாக உள்ளது. அந்தத் தூண்டுகோலாக விஜய் இருப்பதை நாமும் வரவேற்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com