வாக்காளர் சிறப்பு முகாம்களில் குழப்பம்: உறுதிமொழி படிவம் அவசியமா? சென்னையில் BLO-க்கள் கூறுவது என்ன?

SIR special camp
SIR special campimage credit-newindianexpress.com
Published on

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(SIR) டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்த நிலையில் கடந்த 19-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் தமிழகத்தில் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிகமாக 14.25 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களை மீண்டும் வாக்காளராக இணைத்துக்கொள்ள ஒரு மாத காலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக ஜனவரி 18-ந்தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் 4 நாட்கள் அதாவது, டிசம்பர் 27, 28-ம்தேதி(நேற்று) மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.

இதையும் படியுங்கள்:
SIR: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ஐ நிரப்புவது எப்படி..?
SIR special camp

சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் சுமார் 75,000 வாக்குச்சாவடிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் பல சிறப்பு முகாம்களில் தொடர்ந்து குளறுபடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்வதற்கு படிவம் 6 என்று அழைக்கப்படும், புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் அனைவரும் உறுதிமொழி படிவம் என்று அழைக்கப்படும் Declaration படிவம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள பெரும்பாலான சிறப்பு முகாம்களில் உறுதிமொழி படிவம் அளிக்க வேண்டாம் என்றும் படிவம் 6ஐ மட்டும் பூர்த்தி செய்து அளித்தால் மட்டும் போதும் என்று BLOக்கள் கூறியதால் பொதுமக்களும் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து அளித்துள்ளர்.

அதாவது, புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் உறுதிமொழி படிவம் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ள நிலையில் முதல்முறை வாக்களிக்க விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே உறுதிமொழி படிவம் தரப்படும் என அலுவலர்கள் கூறியதால் வாக்காளர்கள் இடையே குழப்பம் நீடிக்கிறது.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் BLOக்கள் உறுதிமொழி படிவம் வழங்காததால், உறுதிமொழி படிவம் இல்லாமலேயே வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்கள் அதனுடன் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் பல்வேறு வாக்குச்சாவடிகளில் BLOக்கள் நீக்கப்பட்ட பழைய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதும் என்று கூறியதால் வாக்காளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. மேலும் தேர்தல் ஆணையம் தெரிவித்த 13 ஆணவங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்ற ஆவணமே இடம்பெறவில்லை.

அப்படி இருக்க தேர்தல் ஆணையம் அறிவிக்காத பழைய வாக்காளர் அடையாள அட்டையை பெறுவது ஏன் என வாக்காளர்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக வாக்குசாவடி அலுவர் கூறும்போது, பழைய தகவல்களை எடுப்பதற்காக மட்டுமே இந்த வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பெற்று வருவதாகவும், இது ஒரு ஆவணமாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தினர்.

உறுதிமொழி படிவம் இல்லாத நிலையில் வாக்காளரின் படிவமே ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறு பல சிறப்பு முகாம்களில் குளறுபடிகள் நடந்து வருவதால் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒரு விரிவாக விளக்கத்தையும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வாக்குச்சாவடியின் முன்பாக என்ன செய்ய வேண்டும், படித்துடன் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு போஸ்டர் வைக்க வேண்டும் என்று வாக்காளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
SIR: 10 லட்சம் வாக்காளர்களுக்கு செக்..! நேரில் ஆஜராகாவிட்டால் பெயர் நீக்கம்..!
SIR special camp

வாக்காளர்களின் இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள சிறப்பு முகாம்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமா தேர்தல் ஆணையம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com