

பீகாரில் தொடங்கிய SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிி, 2-ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, குஜராத், அசாம் ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில், இந்த தீவிர திருத்தப்பணி மிகவும் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியின் முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுத்து பூர்த்தி செய்து பெறப்பட்டன. கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கிய இந்த பணி, கடந்த 14-ந் தேதி முடிவடைந்தது.
இந்த பணியின் அடிப்படையில் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அதன்படி அக்டோபர் மாதத்தில் இருந்த 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 என்ற வாக்காளர் எண்ணிக்கை, வரைவு பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பேர் மட்டுமே இடம் பெற்றனர்.
அதாவது தமிழகத்தில் மட்டும் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டனர். அதில் இறந்தவர்கள் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர். முகவரி மாறியவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் ஆகும்.
சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தொகுதி வாரியாக சைதாப்பேட்டையில் 87,228,
தியாகராயநகர் தொகுதி 95,999,
மயிலாப்பூர் தொகுதி 87,668,
வேளச்சேரி தொகுதி - 1,27,521,
அண்ணாநகர் தொகுதி, 1,18,287,
வில்லிவாக்கம் தொகுதி - 97,960,
திரு.வி.க. நகர் தொகுதி - 59,043,
பெரம்பூர் தொகுதி - 97,345,
எழும்பூர் தொகுதி - 74,858,
ராயபுரம் தொகுதி - 51,711 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளும் பணி அடுத்த மாதம் (ஜனவரி) 18-ந் தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17 அல்லது 19-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.
அதன்படி, நேற்றைய (டிச.25) நிலவரப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1,68,825 பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் ஒரு புதிய குண்டை தூக்கி போட்டு உள்ளது. அதாவது கணக்கெடுப்பு படிவத்தில் ஒரு வாக்காளர் கிராமப்புறமாக இருந்தால் 2002 மற்றும் நகர்ப்புறமாக இருந்தால் 2005-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டு இருந்த வாக்காளர் பட்டியலில் இருந்த தங்களது பெயர் விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது அவர்களது பெற்றோர்கள் இருந்த வாக்காளர் பட்டியல் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
இந்தநிலையில் வாக்காளர் படிவத்தில் 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் இருந்த தங்களது விவரங்களை கொடுக்காத, சுமார் 10 லட்சம் பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
இவ்வாறு சென்னையில் மட்டும் 2,37,619 வாக்காளர்கள் என மாநிலம் முழுவதும் இந்த நோட்டீசுகள், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு பதிவு தபால் மூலம் அல்லது வாக்காளர்களை நேரில் சந்தித்து வழங்கப்பட உள்ளது.
இந்த நோட்டீசை பெறும் வாக்காளர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர் முன்பு நேரில் ஆஜராகி அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் நேரில் ஆஜராகாவிட்டாலோ, ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டாலோ அவர்களது பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. அதுமட்டுமின்றி அவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடவும் முடியாது.
எனவே நோட்டீஸ் பெறும் வாக்காளர்கள், அலட்சியமாக இல்லாமல் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு சர்ச்சை கிளம்பி இருக்கும் நிலையில் மேலும் 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தேர்தல் கமிஷன் அனுப்பும் நோட்டீசுக்கு நேரில் ஆஜராகிறவர்கள் ஆதார் அட்டை கொடுத்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை தர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆவணங்கள் விவரம் வருமாறு:-
மத்திய-மாநில அரசு-பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர் அல்லது ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை.
01.07.1987க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எல்.ஐ.சி., பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள்.
பிறப்புச் சான்றிதழ்.
பாஸ்போர்ட்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழங்கிய மெட்ரிகுலேஷன்-கல்விச் சான்றிதழ்.
தகுதியான மாநில அதிகாரி வழங்கிய நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்.
வன உரிமைச் சான்றிதழ்.
சாதிச் சான்றிதழ்கள்,
தேசிய குடிமக்கள் பதிவேடு (நடைமுறையில் உள்ள பகுதிகளில்), மாநில அல்லது உள்ளாட்சி அதிகாரிகள் தயாரித்த குடும்பப் பதிவேடு.
அரசு வழங்கிய நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.
தேர்தல் கமிஷன் அளித்த பட்டியலில் ‘‘நேட்டிவிட்டி சர்டிபிகேட்'' என்ற பூர்வீக சான்றிதழ் இருக்கிறது. இந்த சான்றிதழை தமிழக அரசு, இ-சேவை மூலம் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தால் வழங்கி வருகிறது. அதற்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பிறப்பிட சான்றிதழ் இலவசமாகவும்(அடுத்த மாதம் 25-ந் தேதி வரை இலவசமாக வழங்கலாம்), ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்வதற்கும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.