
பாலிவுட்டில் முன்னனி நடிகர்களில் ஒருவராகவும், கட்டுடலுடம் வசீகரமும் கொண்ட நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். 59 வயதான பாலிவுட் கிங் நடிகர் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிலாக வலம் வருகிறார். பாலிவுட்டின் பைஜான் என்று பிரபலமாக அழைக்கப்படும் அவருக்கு, தொழில்துறையிலோ அல்லது நாட்டிலோ மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
1988-ம் ஆண்டு திரைவுலகில் நுழைந்த சல்மான் கான் ஆரம்பத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1989-ல் சூரஜ் பர்ஜாத்தியாவின் ‘மைனே பியார் கியா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தன் மூலம் பிரலமடைந்தார். இந்த படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த ‘ஹம் ஆப்கே ஹைன் கௌன்’, ‘ஹம் சாத்-சாத் ஹை’, ‘ கரண் அர்ஜுன்’, ‘பீவி நம்பர் 1’, போன்ற படங்கள் பல வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன் பாலிவுட்டில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
தபாங், ரெடி, பாடிகார்ட், தபாங் 2, டைகர் ஜிந்தா ஹை, பஜ்ரங்கி பைஜான், சுல்தான் போன்ற அதிக வசூல் செய்த அதிரடி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடைசியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்' திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சினிமா மட்டுமின்றி டி.வி.யில் இந்தி ‘பிக்பாஸ்' நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இவர்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
எப்போது உடலை பிட்டாக வைத்து கொள்வதில் ஆர்வம் கொண்ட சல்மான்கான் வீட்டிலேயே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார். அந்த உடற்பயிற்சி கூடத்தில் அனைத்து அதிநவீன உபகாரணங்களும் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக உடல் சோர்வுடன் காணப்படும் சல்மான்கான், தனது உடலில் இருக்கும் பிரச்சினை குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது, "டிரைஜெமினல் நியூரால்ஜியா' என்ற நோய் காரணமாக, எனது மூளையில் ரத்த நாள வீக்கம் பிரச்சினை இருக்கிறது. அதுமட்டுமின்றி ஏ.வி. மால்பார்மேஷன் என்ற பிரச்சனையும் எனக்கு இருக்கிறது. இத்தனை இருந்தும் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். எல்லாம் என் ரசிகர்களுக்காக..", என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
சல்மான்கான் குறிப்பிட்ட டிரைஜெமினல் நியூரால்ஜியா என்ற பிரச்சனையால் முகத்தில் அடிக்கடி கூர்மையான வலி ஏற்படும் என்பதும், இந்த நோயை மருத்துவ உலகில் ‘தற்கொலை நோய்’ என அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.