
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எந்த முடிவும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பரஸ்பரம் இரு நாடுகளில் ஏராளமான உயிர்களை இழந்தும், போரை நிறுத்த இரண்டு நாடுகளும் கவுரவம் பார்க்கின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக ரஷ்ய அதிபர் புடினுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை தொலை பேசியில் நடத்தியிருந்தார். ஜெலன்ஸ்கியை நேரில் அழைத்து போரை நிறுத்துமாறு அழுத்தமும் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி புடினைப் பற்றி ஒரு கணிப்பு வெளியிட்டிருந்தார். மார்ச் 26 அன்று பாரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய பத்திரிகையாளர் சந்திப்பு நேர்காணலின் போது ஜெலென்ஸ்கி "விளாடிமிர் புடின் விரைவில் இறந்துவிடுவார், புடினின் மரணம் விரைவில் நிகழும் என்பது உண்மை" என்று அவர் கூறியிருந்தார். இதை கீவ் இன்டிபென்டன்ட் என்ற உக்ரைன் ஊடகமும் செய்தியாக வெளியிட்டு இருந்துள்ளது.
அதன் பிறகு புடினின் உடல்நிலை குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் தொடர்ச்சியாக யூகங்களை வெளியிட்டு வந்துள்ளது. 72 வயதான புடினுக்கு பல நோய்கள் உள்ளன. கடந்த ஆண்டு அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டு அதற்கு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். தற்போது அவர் நிலை மோசமடைந்து வருவதாக தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடுகின்றன.
இதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வாகனத் அணிவகுப்பு சென்று கொண்டிருக்கும் போது, அதில் ஒரு வாகனத்தில் பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மாஸ்கோவில் உள்ள FSB தலைமையகத்திற்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடிப்புக்கு பிறகு, அணிவகுப்பில் இருந்த லிமோ கார் தீப்பிடித்து எரிந்தது. முதலில் என்ஜினில் பிடித்த தீ, பின்னர் கார் முழுவதும் பரவியது. காரின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. இருப்பினும், இந்த குண்டுவெடிப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
அதிபர் அணிவகுப்பு காரில் குண்டு வெடித்தது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பு தானாகவே நடந்ததா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரை இந்த குண்டுவெடிப்பில் எந்த பெயரும் வெளியிடப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், புடினுக்கு எதிராக இந்த சதியை யார் தீட்டினார்கள்? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கார் வெடிப்புக்கும் உக்ரைன் போருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்று அனைவரின் கண்களும் தற்போது உக்ரைன் பக்கம் திரும்பியுள்ளது. ஜெலன்ஸ்கியின் ஆருடம் பலிக்க தொடங்கியுள்ளதா? என்று ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன.