அமெரிக்காவில் Frida என்ற நிறுவனம் தாய்ப்பால் ஐஸ்க்ரீமை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இது உலக மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதில் குழந்தைகளுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கிறது என்று கூறுவார்கள். அதுதான் உண்மையும் கூட. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதினால், வளர்ந்த பிறகும் கூட ஆரோக்கிய நன்மை அளிக்குமாம்.
இப்படி ஒரு மனிதனுக்கு தாய்ப்பால் என்பது எவ்வளவு அவசியமாக இருக்கிறது. இதை கருத்தில்கொண்டுதான் frida என்ற ஐஸ்க்ரீம் நிறுவனம் ஒரு சிறப்பான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒன்றுதான் ஐஸ்க்ரீம். அதுவும் பிறந்த சில மாதங்களிலேயே நாக்கில் ஐஸ்க்ரீம் வைத்து ருசியை பழக்கப்படுத்தி விடுகிறார்கள். வளர்ந்தவுடன் அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகள் விஷயத்தில் ஐஸ்க்ரீமாக இருந்தாலும் ஆரோக்கியம் அவசியம் இல்லையா? நாம் சாப்பிடும் அதே ஐஸ்கிரீமை குழந்தைகளுக்கு கொடுப்பதனால், தீங்கு நேரிட வாய்ப்பிருக்கிறது. ஆகையால்தான் அதை சரிகட்ட frida நிறுவனம் தாய்ப்பால் ஐஸ்க்ரீமை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இந்த ஐஸ்க்ரீம் தாய்ப்பாலால் செய்யப்படுவதில்லைதான். ஆனால், தாய்ப்பாலில் இருக்கும் அனைத்து நன்மைகளும் இதில் இருக்கும். உண்மையான தாய்ப்பாலை அமெரிக்காவில் உணவு ஒழுங்குமுறை அதிகாரிகள் அங்கீகரிக்காததால், இந்த ஐஸ்கிரீம் தாய்ப்பாலின் "நன்மையை" நெருக்கமாகப் பிரதிபலிக்கும் என்று கூறுப்படுகிறது.
இந்த தாய்ப்பால் ஐஸ்க்ரீமில் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தாய்ப்பாலை ஆர்டர் செய்தால், 9 மாதங்கள் கழித்துதான் டெலிவர் ஆகுமாம். ஒரு நல்ல ஆரோக்கியமாக ஐஸ்க்ரீமுக்காக 9 மாதங்கள் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால், நீங்கள் கர்ப்பம் தரித்த சில மாதங்களிலோ அல்லது குழந்தைப் பிறந்த கையோடு ஆர்டர் செய்யலாம். இந்த முயற்சி மட்டும் வெற்றியில் முடிந்தால், அடுத்தடுத்து உலக நாடுகளிலும் இந்த தாய்ப்பால் ஐஸ்க்ரீம் வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.